தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் முன்னாள் இயக்குநராகவும், திரைப்படக் கல்லூரியில் இயக்குநராகவும் பணியாற்றி பல நடிகர்களை உருவாக்கிய கே. எஸ். நாராயணசாமி (K. S. கோபாலி) அவர்கள், வயது 92, இன்று காலை 6 மணிக்கு காலமானார்.
புனேயில் உள்ள நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமாவின் முதல் மாணவர்களில் ஒருவராக திகழ்ந்த அவர், பின்னர் டாக்டர் பட்டமும் பெற்றிருந்தார். இந்திய திரைப்பட உலகில் பல முன்னணி நடிகர்களை உருவாக்குவதிலும், குறிப்பாக ரஜினிகாந்த் உள்ளிட்ட பலருக்கு நடிப்பு பயிற்சி அளிப்பதிலும் முக்கிய பங்காற்றியவர். மேலும் பல இயக்குநர்களையும் அறிமுகப்படுத்திய திறமைசாலி.
இன்று காலை 6 மணியளவில் அவர் காலமான நிலையில், இன்று மாலை 6 மணிக்கு, அவரது மகள் வைஷ்ணவி தீபக் இறுதி சடங்கை செய்தார்.
ரஜினி, அமிதாப் பச்சன், சிரஞ்சீவி, ராதா ரவி, நாசர் உள்ளிட்ட பல நடிகர்களுக்கு நடிப்பு பயிற்சி வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஜினிகாந்த் மீது அவருக்கு அளவில்லாத அன்பு இருந்தது. அதன் காரணமாகவே இயக்குநர் சிகரம் கே. பாலச்சந்தர் திரைப்படப் பயிற்சிக் கல்லூரிக்கு வந்த போது அவரிடம் ரஜினிகாந்தை மிகச் சிறப்பாக அறிமுகப்படுத்தியவர்.
கோபாலி அவர்கள்மீது மிகுந்த மரியாதையும் மாறாத அன்பும் வைத்திருப்பவர் ரஜினி.
இந்தியன் எக்ஸ்பிரஸ், தூர்தர்ஷன் ஆகியவற்றில் திறம்பட பணியாற்றிய கோபாலி, எண்ணற்ற திரைப்படங்களுக்கு விமர்சனமும் எழுதியுள்ளார்.
அவரது இல்லம்: 32, திருவேங்கடம் தெரு, மந்தைவெளி, சென்னை.

