நடிகர் சிவகார்த்திகேயன் கிளாப் அடிக்க, ‘மண்டாடி’ படத்தின் தயாரிப்பாளர் ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மென்ட் எல்ரெட் குமார் கேமராவை இயக்கி படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார்.

வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களைத் தேர்ந்தெடுத்து, விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றுவரும் நடிகர் சூரி, பிளாக்பஸ்டர் பொழுதுபோக்குத் திரைப்படங்களைத் தயாரிப்பதில் பெயர் பெற்ற தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவிக்கர்ஸ் தயாரிப்பில் நடிக்கும் புதிய படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்கும் ஏழாவது திரைப்படம் இது. நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் தலைமையிலான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் நான்காவது தமிழ்த் திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் திரைப்படத்திற்கு ‘சூரி 7’ என்ற தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் தொடக்க விழா அக்டோபர் 14-ஆம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. தமிழ் திரையுலகைச் சேர்ந்த பல முக்கியப் பிரபலங்கள் இந்த விழாவில் கலந்துகொண்டனர். நடிகர் சிவகார்த்திகேயன் கிளாப் அடிக்க, தயாரிப்பாளர் எல்ரெட் குமார் கேமராவை இயக்கி படப்பிடிப்பை தொடங்கி வைத்தார்.

இந்த விழாவில் தயாரிப்பாளர் எல்ரெட் குமார், இயக்குநர் மதிமாறன், லைகா புரொடக்ஷன்ஸ் தமிழ்க்குமரன், இயக்குநர் கீர்த்தீஸ்வரன், பாந்தம் பிலிம்ஸ் நிறுவனத்தின் பிஜாய் அற்புதராஜ், இயக்குநர்கள் ஏ.ஆர்.கே. சரவணன், நலன் குமாரசாமி, மித்ரன், வெற்றிமாறன், ராம்குமார் மற்றும் தயாரிப்பாளர் அருண் விஸ்வா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

‘இன்று நேற்று நாளை’, ‘அயலான்’ போன்ற வெற்றிப்படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென தனியிடம் பிடித்த இயக்குநர் ரவிக்குமார் இப்படத்தை இயக்குகிறார். புதுமையான கதைக்களங்களை நகைச்சுவையுடனும், அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும் வகையிலும் படங்களை தருவதில் பெயர் பெற்ற இயக்குநர் ரவிக்குமார் சூரியுடன் கைக்கோத்திருப்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘ரணபலி’ படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய பணிகளில் பிஸியாக இருந்தபோதிலும், இப்படத்தின் பூஜையில் கலந்துகொள்வதற்காக தயாரிப்பாளர் நவீன் யெர்னேனி சென்னைக்கு வந்தார். இதுகுறித்து அவர் பகிர்ந்து கொண்டதாவது, “தமிழில் நாங்கள் தயாரித்த ‘குட் பேட் அக்லி’, ‘டியூட்’, ‘மொத ராத்திரி’, ‘இருமுடி’ ஆகிய படங்களுக்குக் கிடைத்த வெற்றியும் வரவேற்பும், இந்த மொழியில் மேலும் பல படங்களைத் தயாரிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை எனக்கு அதிகரித்தது. தற்போது சூரி நடிக்கும் புதிய படத்தை தயாரிக்கிறோம். நிகழ்வில் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவருக்கும் சூரிக்கும் இடையே இருந்த நட்பையும் அன்பையும் பார்ப்பது மகிழ்ச்சியாக இருந்தது. இந்த நிகழ்வில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் எல்ரெட் குமார் மற்றும் அனைத்து திரையுலகப் பிரபலங்களுக்கும் நன்றி” என்றார்.

இயக்குநர் ரவிக்குமார் பகிர்ந்து கொண்டதாவது, “மைத்ரி மூவி மேக்கர்ஸ் போன்ற முன்னணி தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சி. இந்த வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். கதாநாயகனாக சூரி தனக்கென தனியிடம் பிடித்திருக்கிறார். அவரது திறமை மற்றும் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு நியாயம் செய்யும் வகையில் அவரைத் திரையில் காட்ட வேண்டிய கூடுதல் பொறுப்பு எனக்கு இருக்கிறது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்ட சிவகார்த்திகேயன் சார், தயாரிப்பாளர் எல்ரெட் குமார் சார் மற்றும் மதிமாறன், தமிழ்க்குமரன், கீர்த்தீஸ்வரன், பிஜாய் அற்புதராஜ், ஏ.ஆர்.கே. சரவணன், நலன் குமாரசாமி, மித்ரன், வெற்றிமாறன், அருண் விஸ்வா, கரண் அரவிந்த் குமார் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. மிகுந்த உற்சாகத்துடன் இந்தப் படத்தைத் தொடங்குகிறோம். ரசிகர்களுக்கு நிச்சயம் இந்தப் படம் பிடிக்கும்” என்றார்.

‘விடுதலை பாகம் 1’, ‘விடுதலை பாகம் 2’, ‘கருடன்’, ‘கொட்டுக்காளி’, ‘மாமன்’ என கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் அளிக்கும் திரைப்படங்களில் நடித்து கதாநாயகனாக தனக்கென தனியிடம் பிடித்துள்ளார் நடிகர் சூரி. அவரது சமீபத்திய வெளியீடான ‘மண்டாடி’ திரைப்படம், வசூல் ரீதியாக அவரது இடத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது. இந்நிலையில், ‘சூரி 7’ திரைப்படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தில் மற்றொரு புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார். இப்படத்தில் அவர் தேர்ந்தெடுத்துள்ள கதை மற்றும் கதாபாத்திரம் குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

பிளாக்பஸ்டர் திரைப்படங்களை தயாரித்து வரும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தமிழிலும் வெற்றிப்படங்களை தயாரித்து வருகிறது. இந்நிறுவனத்தின் முதல் தமிழ்த் திரைப்படமான ‘குட் பேட் அக்லி’ பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றதைத் தொடர்ந்து, ‘டியூட்’, ‘மொத ராத்திரி’ உள்ளிட்ட படங்களுக்கும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த ஊக்கமும் ரசிகர்களின் அன்பான வரவேற்பும், தமிழில் மேலும் பல திரைப்படங்களைத் தயாரிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை நிறுவனத்துக்கு ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடிக்கிறார். இப்படத்தின் தலைப்பு, மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரங்கள் உள்ளிட்ட தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.