1995 ஆம் ஆண்டு கபடி விளையாட்டுக்காக அர்ஜுனா விருது வென்ற இரண்டாவது தமிழக வீரர் மணத்தி கணேசன். இவரின் கதை தான் “பைசன்” படத்தின் மைய நாட் என்றாலும், தென்மாவட்டங்களை உலுக்கிய பசுபதி பாண்டியன், வெங்கடேஷ பண்ணையார் பகை, தொடர் கொலைகள் இரண்டு சமூக பிரச்சினைகளை பேசியதில் “பைசன்” கொஞ்சம் திமில் தூக்கி நிற்கிறது.

துருவ் விக்ரம் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் பைசன் படம் தீபாவளி விருந்தாக திரைக்கு வந்துள்ளது. பா.ரஞ்சித் தயாரித்துள்ள இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன் நாயகியாக நடித்துள்ளார். ரஜிஷா விஜயன், பசுபதி, அமீர், லால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நிவாஸ் பிரசன்னா இந்த இசையமைத்துள்ளார்.

துருவ் சண்டைக்காட்சிகளில் நிறைய மெனக்கெட்டிருக்கிறார். முகத்தில் கொஞ்சமும் பதட்டமோ, நடிக்கிறோம் என்பதெல்லாம் இல்லாமல் அந்தக் கேரக்டராகவே வாழ்ந்திருக்கிறார். சீயான் விக்ரம் சேது படத்தின் கேரக்டரிருந்து மீண்டு வர வெகுகாலம் பிடித்தது. துருவுக்கும் பைசன் அப்படியொரு படம்தான். காத்திருப்பு வீண் போகவில்லை!

அனுபமா பரமேஷ்வரன் காதல் காட்சிகள், ஏக்கம் என மிளிர்கிறார். ரஜிஷா விஜயனும் ஓகே. பசுபதிக்கு வரும் ஆண்டு விருதுகளை குவிக்கும் வருசம் அப்பப்பா என்ன நடிப்பு. பண்ணையார் கேரக்டருக்கு லால் கொஞ்சம் அந்நியப்பட்டு இருக்கிறது.

படத்தின் நாயகன் அமீர். வடசென்னை ராஜனை விடவும் பாண்டியராஜன் கேரக்டர் உயர்ந்து நிற்கிறது. கருப்பு துண்டு, கண்ணாடி, உடல்மொழி அத்தனையும் ஜெராக்ஸ் எடுத்தது போல கம்பீரம். அமீர் நடிக்கவில்லை வாழ்ந்து விட்டு போயிருக்கிறார் மனுசன்.

கேமராவால் காட்சிக்கு காட்சி கவிதை சொல்லியிருக்கிறார் எழில் அரசு. எடிட்டிங்கில் 20 நிமிஷம் பின்பாதியை வெட்டி வீசியிருந்தால் படம் இன்னும் கிரிப்பாக இருந்திருக்கும்.

மாரி செல்வராஜ் வசனங்கள் கூர் கத்திகள். இந்த கதை என்பது இரண்டு சமுதாயத்தையும் பேலன்ஸ் பண்ண முயற்சித்திருக்கிறார். அழகியல் தருகின்றன காட்சிகள் ஆனாலும் படம் முடிந்த பின் பெரிய தாக்கம் இல்லாமல் வெளியேறுகிறோம்.

பசுபதி பாண்டியன், வெங்கடேஷ பண்ணையார் இரண்டு கேரக்டர்களை தவிர்த்து விட்டு பைசன் பார்த்தால், தமிழில் 101 வது விளையாட்டு படம்.