அதிரடியான முதல் பார்வை வெளியீடு மூலம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ’டிமாண்டி காலனி 3’ திரைப்படம் சமீபத்தில், படத்தில் இருந்து முக்கியமான கதாபாத்திரங்களை அறிமுகம் செய்தது. இதனையடுத்து முழு படப்பிடிப்பும் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது. படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரித்து வருகிறது. தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த படம் வரும் கோடை காலத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது.

பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் பகிர்ந்து கொண்டதாவது, “திறமையான கதை சொல்லல் மற்றும் தொழில்நுட்ப திறமை மட்டுமே ஒரு இயக்குநரை திறமையானவராக மாற்றி விடாது. சொன்ன நேரத்திற்குள் ஒரு படத்தை முடிக்கும் ஒழுக்கமும் அர்ப்பணிப்பும் ஒரு இயக்குநருக்கு முக்கியமானவை. ’டிமாண்டி காலனி 3’ திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. தனித்துவமான இடத்தைக் குறிக்கும் படத்தின் பெயரை போலவே போர்ச்சுகல், மால்டா, லே–லடாக், சென்னை மற்றும் வெளிநாடுகளின் பல இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. பெரிய நடிகர்கள் பட்டாளமும், தொழில்நுட்பக் குழுவும் இருந்ததால், திட்டமிட்ட காலத்தில் படப்பிடிப்பை முடிப்பது இயக்குநருக்கு சவாலாக இருக்கும் எனக் கருதி, தேவைப்பட்டால் காலத்தையும் பட்ஜெட்டையும் நீட்டிக்க நான் தயாராக இருந்தேன். ஆனால், இயக்குநர் அஜய் ஞானமுத்து அர்ப்பணிப்புடன், திட்டமிட்ட 80 நாட்களுக்குள் படப்பிடிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்தார்” என்றார்.

இயக்குநர் அஜய் ஞானமுத்து பகிர்ந்து கொண்டதாவது, “தயாரிப்பாளர் சுதன் சாரிடம் கதை சொல்லி இறுதியானதும் கதையின் தரத்தில் எந்தவிதமான சமரசமும் இருக்கக்கூடாது, அதற்காக எவ்வளவு ரூபாய் வேண்டுமானாலும் செலவு செய்ய தயார் என சொன்னார். ’டிமாண்டி காலனி’ படத்தின் பிரான்சைஸூக்கு இப்படியான தயாரிப்பாளர் கிடைப்பது பெரும் அதிர்ஷ்டம். படத்தில் பல சவால்கள் இருந்தாலும் அதெல்லாம் படக்குழுவின் ஆதரவால் எளிதாக கடந்து வர முடிந்தது. மிகவும் திருப்தியாக மூன்றாம் பாகத்தை உருவாக்கியுள்ளோம். நடிகர் அருள்நிதி மிகவும் அர்ப்பணிப்புடன் நடித்துள்ளார். மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினரால்தான் திட்டப்படி 80 நாட்களுக்குள் படப்பிடிப்பை நிறைவு செய்ய முடிந்தது. ’டிமாண்டி காலனி’ பிரான்சைஸ் மொழி மற்றும் எல்லைகளைக் கடந்து பலதரப்பட்ட ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. இதை மனதில் வைத்தே இந்த மூன்றாம் பாகமும் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த கோடையில் உலகம் முழுவதும் படத்தை ரசிகர்களுக்கு கொண்டு வர ஆவலுடன் காத்திருக்கிறோம்” என்றார்.

இந்த படத்தில் அருள்நிதி, பிரியா பவானி சங்கர், ஆன்ட்டி ஜாஸ்கெலைனன், குரு சோமசுந்தரம், ஜிஎம் குமார், முத்துக்குமார், ஸ்ரீகுமார், மீனாட்சி கோவிந்தராஜன், கதிர், ஆஷிக் ஹுசைன், சர்ஜனோ கலித், அர்ச்சனா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சாம் சி.எஸ் இசையமைக்க, சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். குமரேஷ் டி எடிட்டிங்கை கவனிக்கிறார்.

அஜய் ஆர் ஞானமுத்து எழுதி இயக்கிய ‘டிமாண்டி காலனி 3’ திரைப்படம் இந்த கோடையில் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது. சுதன் சுந்தரம், மனிஷ் சிங்ஹால், துர்காராம் சௌத்ரி ஆகியோர் இப்படத்தைத் தயாரிக்கின்றனர்.

This will close in 0 seconds

This will close in 0 seconds

This will close in 0 seconds

This will close in 0 seconds