பிப்ரவரி 14 காதலர் தினம். நியூ இயர் தவிர்த்து உலகம் முழுக்க கோலாகலமாக கொண்டாடப்படுகிற நாள் இதுவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்!

தனக்குப் பிடித்த ஆண் அல்லது பெண்ணைச் சந்தித்து, ஒற்றை ரோஜா ஒன்றைக் கொடுத்து தன் காதலை வெளிப்படுத்துவதற்கான ஒரு நாளாகப் பார்க்கப்படுகிறது. இது கொஞ்சம் ஓல்டு ஸ்டைல் தான். காதலை வெளிப்படுத்தும் விதம் மாறிக்கொண்டே இருந்தாலும், ஒற்றை ரோஜா எப்போதும் ஸ்பெஷல் என்பதை மறுக்க முடியாது.

தமிழ்நாட்டில், ரோஜாக்கள் வெவ்வேறு ஊர்களில் விலைந்தாலும்…ஓசூர், கிருஷ்ணகிரி ரோஜாவுக்கு உலகம் முழுக்க கிரேஸ் உண்டு.கடந்த சில மாதங்களாக எகிறும் தங்கத்தின் விலையைப் போல்,வழக்கமான நாட்களில் இருக்கும் விலையை விட காதலர் தினத்தன்று விற்கப்படுகிற ஒவ்வொரு ரோஜாவுக்கும் ஒரு விலை உண்டு. உச்சபட்ச விலைக்கு போன காதலர் தினமும் உண்டு.

என்ன இவன், திடீர்னு பூ வியாபாரத்துக்கு போயிட்டான்னு நினைக்க வேண்டாம்… 2026 காதலர் தினத்துக்கு வந்திருக்கிற அட்டகாசமான பூ WITH LOVE.

கடந்த ஆண்டு வெளிவந்த படங்களில், டூரிஸ்ட் ஃபேமிலி படம் தான் அநேகமாக நம்பர் மூவி.நான் இப்படிச் சொன்னதும் வசூல் லிஸ்ட்டைத் தூக்கிட்டு வர வேண்டாம். நான் சொல்றது, குறைந்த பட்ஜெட்டில் படம் பண்ணி லாபம் பார்த்த பட லிஸ்ட்.

அபிசன் ஜீவிந்த் இயக்கத்தில் வெளிவந்த இந்தப் படம் எல்லோராலும் கொண்டாடப்பட்ட ஒரு படம். அடுத்த படம் இயக்குகிற பெரிய வாய்ப்புகள் இருந்தும், இரண்டாவது படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் என்பது,சினிமா இண்டஸ்ட்ரியில் பலருக்கும் ஆச்சரியமாக இருந்தது! சரியான முடிவுதான் என்பது படம் பார்த்து விட்டு வெளியில் வரும்போது உங்களுக்கே புரியும்.

ஸ்கூல் டே ல நடக்கிற லவ் ஸ்டோரிஸ் எவ்வளவோ வந்திருக்கு… சக்ஸசும் ஆகியிருக்கு. காதல் தோல்வியா… ஆணாக இருந்தால் தாடிய வளர்த்துக்கோ, தண்ணிய அடி: பொண்ணா இருந்தா வெளியில் சொல்லாமல் உனக்குள் புதைச்சுக்கோ மாதிரியான படங்கள் ஏராளம். அதுவும் ஹிட்டடிசிருக்கு என்பதையும் மறக்க முடியாது. அது, அந்தந்த காலகட்டம். தற்கொலை செய்யறது… பைத்தியமாகிறது… என தமிழ் சினிமா, காதலைக் கலந்து கட்டிச் சொல்லியிருக்கிறது! பாசிட்டிவாக சொன்ன படங்களும் உண்டு.WITH LOVE வேற லெவல்.

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் அபி ஒரு கேரக்டராக வருவார். குடிச்சிட்டு ரோட்டில் கிடக்கிற காட்சி தொடங்கி, கிளைமாக்ஸ் காட்சி வரும்போதுதான் அந்தக் கேரக்டர் படத்துக்கு எவ்வளவு முக்கியம் என்று! அவர்தான் டைரக்டர் என்பதே லேட்டாக தான் தெரியும். இந்தப் படத்தில் அவர்தான் ஹீரோ என்று தெரிந்தே படம் பார்க்க உட்கார்ந்தேன். எங்கேயும் அபி இல்லை! கதையின் நாயகனாக அட்டகாசம் பண்ணியிருக்கிறார். ஸ்கூல்,காலேஜ்; அடுத்த கட்டம் என அத்தனையிலும் ஆகச் சிறப்பு.

உடன் நடித்த ஹீரோயின்ஸ் , இன்ன பிற கேரக்டர்ஸ் அத்தனையும் ஸ்கூல் டே வுக்கு நம்மைக் கொண்டு போகிறார்கள். அதர் லாங்குவேஜ் சினிமாவில் இந்த மாதிரியான கதைக்கு ஏற்ற இளம் ஹீரோக்கள் நிறைய இருக்கிறார்கள். தமிழ் சினிமாவுக்கு புதிய வாசலை திறந்து வைத்திருக்கிறார், அறிமுக இயக்குனர் மதன்.

90s 2k தொடங்கி எல்லோரும் கொண்டாடும் படமாக WITH LOVE இருக்கும். தரமான படம் வந்தால், டீமுக்கு ஒரு பொக்கே கொடுப்போம். இந்த டீம் எல்லோருக்கும் : ஒத்த ரோஜா பார்சல்.

You missed

This will close in 0 seconds

This will close in 0 seconds