எழுத்தாளர் இரா. சரவணன் எழுதிய ‘சங்காரம்’ நூல் வெளியீடு & அறிமுக விழா
‘கத்துக்குட்டி’, ‘உடன்பிறப்பே’, ‘நந்தன்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநரும், எழுத்தாளருமான இரா. சரவணன் எழுதிய ‘சங்காரம்’ எனும் நூல் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவில் எழுத்தாளரும், பத்திரிக்கையாளரும், பதிப்பாளருமான நக்கீரன் கோபால் , மக்களவை உறுப்பினரும், இலக்கியவாதியுமான திருமதி தமிழச்சி தங்கபாண்டியன், ‘ஆனந்த விகடன்’ ஆசிரியர் முருகன், ‘ஜூனியர் விகடன்’ ஆசிரியர் கலைச்செல்வன், கவிஞர் வெயில், நடிகர்கள் சசிகுமார், சூரி, திருமதி கலா சின்னதுரை, தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

ஜூனியர் விகடன் எனும் வார இதழில் ஐம்பது வாரத்திற்கும் மேலாக எழுதப்பட்டு, வாசகர்களிடம் பேராதரவை பெற்ற  தொடர்.. தற்போது’ சங்காரம்’ எனும் நூலாக தயாராகி இருக்கிறது.‌ வன்முறையும், பேரன்பும் கொண்ட கதை மாந்தர்களால் நிரம்பிய இந்த நாவலின் அறிமுக விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள் தங்களது அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர்.

கவிஞர் வெயில் பேசுகையில்,

” ஜூனியர் விகடன் இதழில் ‘ஒரு கொலை 6 ஆயிரம் ரூபாய்’ என்ற பெயரில் ஒரு கட்டுரை வெளியானது. இந்த கட்டுரையை படித்த சரவணன் திரைப்பட இயக்குநராக இருந்தாலும் … அவருடைய மனதில் எப்போதும் உறங்காத ஒரு பத்திரிக்கையாளராக என்னை அழைத்து பேசினார்.‌ அந்த சந்திப்பில் நான் எழுதிய கட்டுரையை கடந்தும் பல விசயங்களை குறிப்பிட்டார்.‌
அப்போது அவர் ஒரு சம்பவத்தை சொன்னார். அந்த சம்பவத்தை… அவர் சொன்ன விதத்தை… பார்த்துவிட்டு, ஜுவிக்கு ஒரு தொடர் எழுதுங்கள் என்று அன்பாக கட்டளையிட்டேன். அப்போது அவர், ‘நான் ஒரு சிறுகதை கூட எழுதியதில்லையே… எப்படி தொடரை எழுத முடியும்’ என்றார். ஆனால் எனக்கு அவர் மீது நம்பிக்கை இருந்தது. ஏனென்றால் அடிப்படையில் அவர் ஒரு கதை சொல்லி. அவருடைய கட்டுரையை நான் வாசித்திருக்கிறேன்.

பொதுவாக ஒரு பத்திரிக்கையாளருடைய கட்டுரையில் தகவல்களும், தரவுகளும் கொட்டிக் கிடக்கும். ஆனால் சரவணனுடைய கட்டுரையில் உணர்ச்சியும் மேலோங்கி இருக்கும். களத்திற்கு சென்று மக்களை சந்தித்து தகவல் திரட்டி அதனுடைய சூடு குறையும் முன்பாக வெப்பத்துடன் கட்டுரையை எழுதுவார். அவருடைய எழுத்தில் ஒரு எழுத்தாளரின் இலக்கியத்துவம் மிகுந்த நடை இருக்கிறது. அதற்குத் தேவையான உணர்வும் இருப்பதால் அவரை நான் எழுதுங்கள் என்று சொன்னேன்.

ஒரு கதையை எழுதுவதற்கு இலக்கிய பயிற்சி இருக்க வேண்டும். இல்லையென்றால் ஒரு கதையை சுவைபட சொல்ல இயலாது.

சரவணனிடம் பெண்களிடம் இருந்து கற்றுக் கொள்ளும் மனப்பான்மை இருக்கிறது. இதன் காரணமாக கூட அவருடைய எழுத்து மேம்பட்டிருக்கலாம்.

இந்த நூலுக்கு பெயர் சூட்டியது தனிக்கதை. நாங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தலைப்பை சொல்ல.. வரை கலை ஓவியரான பாண்டியன் என்பவர் சம்ஹாரம் என சொல்ல… அதனை தமிழில் ‘சங்காரம்’ என பாரதி தாசன் குறிப்பிட்டதை.. இதன் தலைப்பாக  தேர்வு செய்தோம். சங்காரம் என்ற ஒரு சொல் … அவருடைய எழுத்தில் மிகப்பெரிய வீச்சை உருவாக்கியது.

ஒவ்வொரு தொடருக்கான கட்டுரையை அவர் அதிகபட்சம் ஒரு மணி நேரத்திற்குள் எழுதி கொடுத்து விடுவார், நிறைய அனுபவங்களை மனதிற்குள் வைத்துக் கொண்டு இருப்பார்களால்தான் இப்படி சரளமாக குறுகிய நேரத்தில் தரமாக எழுத இயலும்.

இந்த நூலில் சொல்லப்பட்டிருக்கும் விசயத்தை சுருக்கமாக விவரிக்க வேண்டும் என்றால்.. குற்றம் தான் அனைத்திற்கும் அடிப்படை.  குற்றத்தை பற்றிய உளவியல் ரீதியிலான கவித்துவமான இலக்கியத் தரமான நூலாக நான் எப்போதும் பைபிளை தான் பார்ப்பேன்.
அதில் ‘மனிதன் எப்போது தன்னை மறைக்கத்தொடங்கினானோ… அப்போதே குற்றம் பிறக்கிறது’ என்றிருக்கும்.

பாலியல் குற்றமும், அதிகாரத்தை கைப்பற்றும் குணமும் தான் மனிதர்களின் பிரதான இரண்டு குற்றங்கள் என நான் பார்க்கிறேன்.‌
இதுதான் இந்த நாவல் முழுவதும் பரவி கிடக்கிறது.

டெல்டா மண்டலத்தில் செயல்படும் இரண்டு தாதாக்கள் ….அந்த இரண்டு தாதாக்களுடைய இரண்டு காதல்கள்— அவர்களை சுற்றியுள்ள மனிதர்கள் — விசுவாசிகள்… உறவினர்கள்… இந்த இரண்டு தாதாக்களையும் பயன்படுத்திக் கொள்கிற ஒரு அரசியல்வாதி…. இந்த இரண்டு தாதாக்களையும் கொன்று விட வேண்டும் என நினைத்து செயல்படும் ஒரு காவல்துறை அதிகாரி… இதற்குள்
நிகழும் சம்பவங்கள் தான் இந்த நாவலின் கதை.

இரண்டு தாதாக்களின் வன்முறை உலகத்தை எழுதியிருந்தாலும்.. இதில் மனித உணர்வுகளுக்கும் , அவனுடைய அக போராட்டங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலமாக நிறைய உணர்ச்சிகளை பற்றி பேசி இருக்கிறார். இதில் சமூகத்தை உலுக்கி கொண்டிருக்கும் சாதிய பிரச்சினையை பற்றியும் பேசி இருக்கிறார். ஒடுக்கப்பட்டவர்களுடைய எழுச்சி என்பது எவ்வளவு நுட்பமானதாக இருக்க வேண்டும் என்பதையும் விவரித்திருக்கிறார். இது விவாதிக்கப்பட வேண்டிய விசயமும் கூட.

வன்முறை அதிகம் பேசப்படும் இந்த நாவலின் காமமும் , ரொமான்ஸும் பேசப்பட்டு இருக்கும். காமம், வன்மம் எனும் இரு பிரிவுகளிலும் சொல்லப்பட்டிருக்கும் கதை இது.‌

ஆண்- பெண் என இரு பாலின அரசியலை சரியாக சம நிகராக புரிந்து கொண்டிருக்கும் ஒருவரால் தான் காமத்தை கண்ணியமாக எழுத இயலும். அந்த வகையில் இரா. சரவணன் மாஸ்டர் என்று சொல்லலாம்.‌

இந்த நாவலில் தன் பாலின ஈர்ப்பாளர்களைப் பற்றியும் விவரித்து இருக்கிறார்.  இந்த சங்காரம் நாவல் உலகத்தில் உள்ள உறவுகளைப் பற்றி பேசக்கூடிய நாவலாக இருக்கிறது.

இந்த புத்தகத்தை வாசித்தவர்களுக்கு வாசித்த பின் மரிக்கொழுந்து வாசம் தான் வீசும். அந்த அளவிற்கு இந்த நாவலில் மரிக்கொழுந்து எனும் கதாபாத்திரம் அமைந்திருக்கிறது.

அத்துடன் இந்த கதாபாத்திரத்தில் சக மனிதர்கள் மீது ஒவ்வொருவரும் காரணமற்ற அன்பை செலுத்துவார்கள் என்ற பேருண்மையையும் வெளிப்படுத்தி இருக்கிறார்.

குற்றம் என்பது நமக்கு நாமே வகுத்துக் கொண்ட எல்லையை மீறுவது. இதனையே அதிகாரத்தில் இருப்பவர்கள் மீறும் போது எமக்குள் எழும் வெடிப்புதான் சங்காரம். இந்த சங்காரம் தொடரும். இது முடிவுறாத மானுட கதையாக இருக்கும் என நினைக்கிறேன்” என்றார்.

திரு. கலைச்செல்வன் பேசுகையில்,

” பேசுவது எப்படி ஒரு கலையோ அதேபோல் பேசாமல் இருப்பதும் ஒரு கலை. அந்தப் பட்டியலில் உள்ள நான் சரவணன் கேட்டுக் கொண்டதற்காக இங்கு அவரை வாழ்த்த வருகை தந்துள்ளேன்.

சரவணன்-  இந்த மனிதர்களின் இருளடைந்த பகுதிக்குள் சரளமாக உலா வருகிற ஒரு நபர். அவருடைய திரைப்படங்களில் சமூகப் பிரச்சனையை விவசாயிகளின் பிரச்சனையை குடும்ப உறவுகளின் சென்டிமென்ட் சார்ந்த பிரச்சனையை பேசி இருக்கிறார்.  ஆனால் அவர் இப்படி ஒரு எழுத்தை வழங்குவார் என்று எதிர்பார்க்கவில்லை. அவருக்குள் இருக்கும் எழுத்தாளருக்கு என் வாழ்த்துக்கள்” என்றார்

திரு.  முருகன் பேசுகையில்,

” சரவணன் கட்டுரை எழுதும் போதே அது ஒரு இலக்கியமாக இருக்கும். அதனால் அவர் இப்படி ஒரு நாவல் எழுதி இருப்பது வியப்பல்ல. ஒரு தொடரை நூறு அத்தியாயங்களுக்கு மேல் எழுதி ஏராளமான வாசகர்களை படிக்க வைப்பது என்பது எளிதான விசயம் அல்ல. ஒரு பத்திரிக்கையாளராக இருந்து கதை சொல்லும் போது அது சுவைபட இருக்கும்.

சரவணன் இந்த சிறிய வயதிற்குள் ஏராளமான மனிதர்களை சந்தித்து அவர்களின் அனுபவங்களை பொறுமையுடன் கேட்டிருக்கிறார். அதனால்தான் இந்த கதை இவ்வளவு இன்ட்ரஸ்ட் ஆக வந்திருக்கிறது.‌

இந்தக் கதையில் சூரியையும், மார்ட்டினையும் அவர் நேர் எதிராக நிறுத்துவது நன்றாக இருக்கும்.

இந்தக் கதை வன்முறை நிரந்த கதை என்பதை மேலோட்டமாக பார்த்தால் சொல்லலாம்.‌ அன்பு எப்படி எல்லா மண்ணுக்கும் பொருத்தமானதோ… அதேபோல் வன்முறையும் எல்லா மண்ணிற்கும் பொதுவானது தான்.

இந்தக் கதை சினிமாவாகவோ இணைய தொடராகவோ உருவானால் நிச்சயமாக வெற்றி பெறக்கூடும்.‌ இது போன்ற நூற்றுக்கணக்கான கதை சரவணன் இடத்தில் இருக்கிறது. எழுதுவதற்கு எங்களிடம் இடம் இருக்கிறது. அவர் தொடர்ந்து நிறைய எழுத வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் ” என்றார்.

தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் பேசுகையில்,

” சரவணனை பத்திரிக்கையாளராக தெரியும். எழுத்தாளராக தெரியும். இயக்குநராகவும் தெரியும். அவர் எழுதிய இந்த நாவலை படிக்கும் போது தான் அவருக்குள் இவ்வளவு பெரிய வன்முறையும், காதலும் இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டேன். இந்த நாவலில் ஆக்சன் சீனும் அதிகம் ரொமான்ஸ் சீனும் அதிகம். இந்த நாவலின் ஒவ்வொரு அத்தியாயத்தை வாசிக்கும் போதும் ஒரு ஆக்ஷன் படத்தை பார்ப்பது போல் இருந்தது. இந்த புத்தகத்தை படிக்கும் போது சினிமாவிற்கான நிறைய காட்சிகளை எழுதி இருக்கிறார் என்பதை பார்த்தேன். சினிமாவாக உருவாகும் போது மிகப்பெரிய வெற்றியை பெறும் என்பது என்னுடைய நம்பிக்கை. நாவலில்  இருக்கும் சூரி மற்றும் மார்ட்டின் என இரண்டு கதாபாத்திரத்தை வைத்து சினிமாவை உருவாக்கலாம். இதை திரைப்படமாக எடுத்தால் எங்களுடைய மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் என்பதை இந்த தருணத்தில் நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்” என்றார்.
திருமதி சத்யா கரிகாலன் பேசுகையில்,

”புத்தகங்கள் நமக்கு நிரந்தரமான தோழர்கள் என புத்தகத்தை தொடர்ந்து வாசிப்பவர்களுக்கு நன்கு தெரியும். மனித சமுதாயத்திற்கு நிரந்தரமான விடுதலையை புத்தகம் மூலம் அடைய முடியும் என்பது என்னுடைய நம்பிக்கை. அந்த வகையில் விடுதலை சிந்தனை கொண்ட எழுத்தாளரும், இயக்குநரும் , சிறந்த நண்பருமான சரவணனுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

சரவணிடமிருந்து இது போன்ற படைப்புகள் வருவது எனக்கு மகிழ்ச்சியேத் தவிர ஆச்சரியம் இல்லை. மனிதர்களை காதலிக்க கூடிய ஒரு கலைஞனுக்கு அதே மனிதர்கள் சில நேரங்களில் பொருளாதாரத்திற்காகவும் அதிகாரத்திற்காகவும் சில சல்லித்தனமான செயல்களை செய்யும் பொழுது அதை நுட்பமாக உணர்ந்த ஒரு படைப்பாளியின் கோபத்தின் வெளிப்பாடு தான் இந்த புத்தகம்.‌

இவர் மனிதர்களிடத்தில் மட்டும் பற்றும் பாசமும் அன்பும் கொண்டவர் இல்லை. இயற்கை மீதும் பேரன்பும் காதலும் கொண்டவர் என்பது இந்த கதையில் ஆங்காங்கே எட்டிப் பார்க்கும்.

‘எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும் ஒரு  பூ பூக்கத் தான் செய்யும்’ என பிரபஞ்சன் குறிப்பிட்டதை போல்… ‘ தலையை காவு வாங்க ஒரு கூட்டம் காத்திருக்கும் நிலையில் ..ஒருவன் காதலித்துக்கொண்டிருக்கிறான் என்பதே சமகால கவித்துவமாக தான் நான் பார்க்கிறேன்.

அத்துடன் இந்த நாவலில் காமத்தில் புரிதலின் அவசியத்தை குறித்து நெற்றிப்பொட்டில் அடித்தது போல் சொல்லி இருக்கிறார்.

இந்தக் கதை அதிகார வேட்கையின் உச்சகட்டத்தை விவரிக்கும் வகையில் தொடங்கினாலும்.. படிப்படியாக பெண் முடிவெடுக்கும் திறனை நோக்கி நகர்ந்து வருவதால் ஒரு பெண்ணாக இதை பார்க்கும் போது சரவணன் மீதான மரியாதை இன்னும் அதிகமாகிறது” என்றார்.

நக்கீரன் கோபால் பேசுகையில்,

” இந்த விழாவை தற்போது சென்னையில் நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சியில் உள்ள பிரம்மாண்டமான அரங்கத்தில் நடந்திருந்தால்… இன்னும் சில ஆயிரம் பேர் புத்தகக் கண்காட்சிக்கு வருகை தந்திருப்பார்கள்.

இந்த தொடரைப் பற்றி என்னுடன் பணியாற்றிய லே அவுட் ஆர்டிஸ்ட்டான பாண்டியன்.. ‘கதை முழுவதும் ரத்தம் தான்’ என சொல்வார். டெல்டா என்ற உடன் நான் சரவணனிடம் மணல்மேடு சங்கர் என்பவரை பற்றிய விசயங்கள் இடம் பிடித்திருக்கிறதா..? என கேட்டேன். அவர் ஆமாம் என தலையாட்டினார்.

இந்த விழாவிற்கு வருகை தந்திருக்கும் முருகனுடைய வாழ்வில் நடைபெற்ற சம்பவமும் ஒரு கதையாக எழுதலாம்.‌” என்றார்.

நடிகர் சூரி பேசுகையில்,

” நேற்று முதல் நான் பதட்டத்தின் உச்சத்தில் தான் இருக்கிறேன்.‌ சரவணன் போன் செய்து நூல் வெளியீட்டு விழாவிற்கு அவசியம் வர வேண்டும் என சொன்னார். எப்போது? எனக் கேட்டேன். ‘நாளை’ என்றார். யார் யாரெல்லாம் வருகிறார்கள்? என கேட்டேன். இங்கு மேடையில் வீற்றிருக்கும் அனைத்து சிறப்பு விருந்தினர்களும் வருகிறார்கள் என சொன்னார். . நான் சிறிது நேரம் மௌனம் காத்து விட்டு என்னை எதற்காக அழைக்கிறீர்கள்? எனக் கேட்டேன். நீங்கள் வந்தால் தான் சிறப்பாக இருக்கும் என்றார்.  புத்தகத்தை அனுப்பி இருக்கிறேன் படித்துவிட்டு விழாவிற்கு வாருங்கள் என சொன்னார். அப்போது அவரிடம் புத்தகத்தை படிக்க வா? அல்லது விழாவிற்கு வரவா? இரண்டில் ஏதாவது ஒன்றை சொல்லுங்கள் என்று கேட்டேன்.‌ விழாவிற்கு வாருங்கள் என சொன்னார்.

விழாவிற்காக கிளம்பும்போது என் மனைவி இரண்டு பக்கத்தைையாவது படித்துவிட்டு செல்லுங்கள் என சொன்னார். ஜோசியக்காரன் போல் புத்தகத்தில் ஒரு பக்கத்தை திடீரென்று எடுத்தேன். அது 43 வது பகுதி.   மார்ட்டின்- காயத்ரி பற்றி எழுதி இருந்ததை உரக்க வாசித்துக் கொண்டிருந்தேன். இருவருக்கும் இடையேயான அளவற்ற காதலை.. கட்டுக்கடதங்காத காதலை.. அடாவடித்தனமான அந்த அன்பை ஒளிந்து இருந்து ஜன்னல் வழியாக பார்ப்பது போல் ஆகிவிட்டது. அவரது எழுத்து நடையை வாசிக்கும் போது உருவம் தெரிந்தது. அதுதான் அவருடைய சிறப்பு.

அண்ணன் சமுத்திரக்கனி படிப்பதற்காக இரண்டு புத்தகங்களை கொடுத்திருக்கிறார். அவரை சந்திப்பதை இப்போது தவிர்த்து வருகிறேன். ஏனென்றால் சந்திக்கும்போது புத்தகத்தை படித்து விட்டாயா? என கேட்டால்… என்ன பதில் சொல்வது?

என்னை பொருத்தவரை புத்தகத்தை நான் பொழுதுபோக்காக நினைத்து விட்டேன். நான் ஏன் அடிக்கடி புத்தகத்தை பார்த்தேன் என்றால் இந்த புத்தகத்தின் டைட்டிலை மறந்து விடக்கூடாது என்பதற்காக பார்த்தேன். சங்காரம் என்பதை சிங்காரம் என்று பேசிவிட்டால் தப்பாக்கி போய்விடும் அல்லவா..!

புத்தகம் சாதாரண விசயம் அல்ல. பல நாடுகளில் பல சரித்திரத்தை உருவாக்கி இருப்பது புத்தகங்கள் தான். எழுத்துகள் தான் சமூக சீர்திருத்தத்தை உருவாக்கியிருக்கிறது. சமூகத்திற்கு தேவையான பல நல்ல விசயங்களை புத்தகங்கள்தான் கொடுத்திருக்கிறது. எத்தனை ஆண்டு காலமானாலும் புத்தகங்கள் அழிவதில்லை.‌

இப்போதுதான் புத்தகத்தின் அருமையை தெரிந்து கொண்டிருக்கிறேன். :மாமன்’ படத்திற்கு கதை எழுதினேன். தற்போது என் தந்தையை பற்றிய சுயசரிதையை எழுதி வருகிறேன்.

இரா. சரவணன் இயக்குநர் மட்டுமல்ல அவருடைய சமூகத்திற்கான பங்களிப்பு இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அவருடைய எழுத்தில் உருவான இந்த புத்தகம் விரைவில் திரைப்படமாக உருவாகும் என நான் நம்புகிறேன்” என்றார்.

திருமதி தமிழச்சி தங்கபாண்டியன் பேசுகையில்,

” என்னுடைய நண்பர் 20 ஆண்டுகளுக்கு முன் இலக்கியவாதியாக அறிமுகமாகி இன்றுவரை நட்பை தொடரும் இரா சரவணன் எழுதிய சங்காரம் எனும் நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு அவரை வாழ்த்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்தப் புத்தகத்தை என்னுடைய இரண்டு நாள் பயணத்தின் போது கிடைத்த ஓய்வு நேரங்களில் ஓரளவு வாசித்திருக்கிறேன். இன்னும் முழுமையாக வாசிக்கவில்லை.‌
இந்த நாவல் நாவலின் மையப்புள்ளி … கதைக்களம் என்ன? கதை மாந்தர்கள் ஊடாக தொட்டுச்செல்லும் பாதை என்ன? இதைப் பற்றி எல்லாம்  எனக்கு முன்னால் பேசியவர்கள் குறிப்பிட்டார்கள்.

சரவணன் இலக்கியவாதியாக உருவெடுத்து விடுவார் என கவிஞர் வெயில் குறிப்பிட்டார்.  அதற்கான அத்தனை அடையாளங்களும் இருபது ஆண்டுகளுக்கு முன்பே சரவணனிடம் இருந்தன.

என்னுடைய எல்லா எழுத்துக்கும் முதல் விமர்சனம் சரவணனிடம் இருந்து தான் வரும். அவருடைய பாராட்டு எனக்கு மிகப்பெரிய உந்துதலாக இருந்தது.

இலக்கியத்தில் உள்ள படைப்புகளில் கருப்பொருள் என்ன என்றால்… எப்போதும் அது சாமானிய மனிதனாகத்தான் இருக்கும்.

இந்த நாவலில் இடம்பெறும் பெண் கதாபாத்திரங்கள் குறிப்பாக கீரை துறை என மதுரையில் உள்ள பகுதியில் பகுதியைச் சார்ந்த சம்மணச்சி எனும் கதாபாத்திரம் அதாவது மார்ட்டினின் தாய் கதாபாத்திரம் எனக்கு பிடித்திருந்தது .அதேபோல் அனைவருக்கும் பிடித்த மரிக்கொழுந்து என்ற கதாபாத்திரமும் எனக்கு பிடித்திருந்தது.

மார்ட்டினும், அவரது தாயாரும் உரையாடும் உரையாடல் என்னை கவர்ந்திருந்தது.

சூரி-  குற்ற உலகத்தில் இருந்து விலகி இருப்பதற்காக பட்டினி இருக்கும் விசயம் குறித்து பேசுவதும் என்னைக் கவர்ந்தது.

இந்த நாவலில் கதை மாந்தர்கள் பேசும் பல விசயங்களை என்னுடைய அனுபவத்தில் சந்தித்திருக்கிறேன்.

நான் மிகவும் மதிக்கின்ற அமெரிக்க நாவலாசிரியரான திம்மோ பிரெய்ன் ஒரு ராணுவ வீரராக வியட்நாமில் தன் வாழ்க்கையை கழித்தவர். அவருடைய எழுத்துக்கள் அனைத்தும் போர் பற்றிய உண்மை சம்பவங்களாகத்தான் இருக்கும். ‘கதைகளால் நம்மை காப்பாற்ற இயலும்’ என ஒரு மேற்கோளை அவர் அடிக்கடி குறிப்பிடுவார்.  இந்த நாவலை வாசிக்கும் போதும் அந்த உணர்வு ஏற்பட்டது.

நான் வாசித்த வரை இந்த நூல் பெண்களைப் பற்றிய கதை தான். பெண்கள் என்றால் சூழலுக்கு பலியாகிய பெண்கள்.  இவர்களின் வாழ்வியல் இருந்து என்னால் பல விசயங்களை ஏற்றுக் கொள்ள முடிகிறது.

இந்த நாவலின் கதை அரசியல் – காவல்துறை – குற்ற பின்புலம் – இதனை சுற்றி தான் பின்னப்பட்டிருக்கிறது.  இதில் எம்முடைய எளிய அறம் சார்ந்த வாழ்க்கையை எப்படி காப்பாற்றிக் கொள்ளலாம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

அத்துடன் இதில் எழுத்தாளரின் கிராஃப்ட்டும், கன்டென்டும் கரெக்டா செல்கிறது என புரிந்து கொண்டேன். இதற்காக சரவணனுக்கு என்னுடைய அன்பான பாராட்டுக்கள்.

‘அருவா மனையும் ஒரு ஆம்பள போல..’ என்ற ஒரு பெண்ணின் சொல்லாடலை கடந்து செல்ல எனக்கு வெகுநேரமானது.

லியோ டால்ஸ்டாயின் ‘புத்துயிர்ப்பு ‘ என்ற நாவலில் இடம்பெறும் மாஸ்லாவா எனும் கதாபாத்திரத்தை.. மரிக்கொழுந்து நினைவு படுத்தினாள்.

எல்லா வகையான கதாபாத்திரங்களையும் இடம்பெறச் செய்து வாசிப்பவர்களுக்கு அவர்களுடன் இணைந்து பயணிக்க வைக்கும் வகையில் ஒரு புதினம் இருப்பது தான் ஒரு புதினத்தின் மிகப்பெரிய வெற்றி என நான் கருதுவேன்.

இதில் நிறைய கிளைக் கதைகள் இருக்கிறது. அதில் வரும் கதாபாத்திரங்களுக்கும் ஒவ்வொரு குணமும், நிறமும் இருக்கிறது.

இது உங்களுடைய முதல் நாவல் என்றார்கள். தொடர்ந்து எழுதுங்கள் என நான் கேட்க மாட்டேன். ஏனென்றால் இது சிறந்தது. இது ஒன்றே உங்களது பெயரை சொல்லிக் கொண்டிருக்கும்”  என்றார்.

நடிகர் சசிகுமார் பேசுகையில், ‌

” 2010 ஆம் ஆண்டில் எழுத்தாளர் சாருவின் புத்தக வெளியீட்டு விழாவின்போது இலக்கியவாதி தமிழச்சி தங்கபாண்டியன் அருகே அமர்ந்தேன். அதன் பிறகு இன்று தான் அவருடன் ஒன்றாக மேடையில் இருக்கிறேன். அந்த மேடையிலும் புத்தகத்தை கையில் வைத்துக்கொண்டு ஏராளமான குறிப்புகளுடன் பேசுவதற்கு தயாராக இருந்தார். இன்றும் அவர் புத்தகத்தில் நிறைய குறிப்புகளை வைத்து பேசுதற்கு தயாராக இருந்தார். அன்று அவரிடம் இருந்து ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளும் போது அந்த புத்தகத்தை வாசித்து விட வேண்டும் என்பதை கற்றுக் கொண்டேன். நான் இந்த முறை சங்காரம் புத்தகத்தை முழுமையாக படித்து விட்டேன்.

சரவணன் என் நண்பர் மட்டுமல்ல. அவர் தனக்காக எதுவும் எப்போதும் கேட்டதில்லை. அவரை 2010 ஆம் ஆண்டில் தான் சந்தித்தேன்.‌ அன்று அறிமுகமான நட்பு இன்று வரை தொடர்கிறது. எனக்கு ஒரு பிரச்சனை என்றால் என்னுடன் தோளுக்கு தோளாக நின்று உதவுபவர். நான் மனதளவில் உடைந்து போயிருந்த போது ஆறுதல் சொல்லி தேற்றியவர் சரவணன்.

சங்காரம் நாவலை படித்த பிறகு இது நன்றாக இருக்கிறது இதை திரைப்படமாக உருவாக்குவோம். இந்த கதையில் நான் ஹீரோவாக நடிக்கிறேன் என்று சொன்னேன். உடனே அவர் இதில் சூரி ஹீரோவாக நடிக்க வேண்டும் என்பதற்காக ஒரு கதாபாத்திரத்திற்கு சூரி என்றே பெயர் வைத்திருக்கிறேன் என்றார்.  நிச்சயமாக இந்த நாவல் திரைப்படமாக உருவான மிகப்பெரிய வெற்றியை பெறும்.‌ சுப்பிரமணியபுரம் படத்தை போல் இந்த சங்காரம் நாவலும் படமாக உருவாகி வெற்றி பெறும். என்னைப் பொறுத்தவரை சங்காரம் நாவலை ஒரு திரைக்கதை புத்தகமாக தான் நான் பார்க்கிறேன்.

இந்த சங்காரம் நாவலை படித்தவுடன் சூரி – மார்ட்டினுக்கு என்ன ஆச்சு? மரிக்கொழுந்துக்கு என்ன ஆச்சு? என்ற கேள்வி.. எல்லார் மனதிலும் எழும்” என்றார்.

எழுத்தாளர் இரா சரவணன் பேசுகையில்,

” இந்த புத்தக வெளியீட்டு விழா வேண்டாம் என்றுதான் திட்டமிட்டிருந்தேன். ஆனால் என்னுடைய நண்பரும் நடிகருமான ‘சசிகுமார் இப்படி ஒரு விழா வேண்டும். சங்காரம் பெரிய அளவில் பேசப்படுவதற்கு ஒரு விழாவை முன்னெடுக்க வேண்டும்’ என வலிந்து சொன்னதால் இதில் கலந்துகொள்ள ஒப்புக்கொண்டேன். அதன் பிறகு இந்த விழாவை என்னுடைய நண்பரும் பத்திரிக்கையாளருமான கலைச்செல்வனுக்கான விழாவாக முன்னெடுப்போம் என நானும் கூற இப்போது இந்த விழா நடைபெறுகிறது.

பிரபலமான வார இதழின் ஆசிரியராக இருந்தாலும் எந்த ஒரு அரசியல்வாதியையும் நேரில் சந்திப்பதை தவிர்ப்பதுடன் மட்டுமல்லாமல் பேசுவதையும் குறைத்து நிதானமாக பணியாற்றி வரும் பத்திரிக்கையாளர் கலைச்செல்வன் இந்த விழாவிற்கு வந்து வாழ்த்தி பேசியதை நான் வெற்றியாக கருதுகிறேன்.

நக்கீரன் கோபால் கலந்து கொண்டால் அது குடும்ப விழா தான்.

நான் விகடனை விட்டு வெளியேறுகிறேன் என்றால் பத்திரிக்கை துறையில் இருந்து வெளியேறுகிறேன் என்பதுதான் உண்மை என அங்கிருந்து பணியாற்றி  விடைபெற்ற இறுதி நாளன்று தெரிவித்தேன். என்னுடைய எல்லாவற்றுக்கும் விகடன் தான் உரம்.

ஆனால் திரை விழா எனும் நிகழ்வின் நக்கீரன் கோபாலை சந்தித்த பிறகு அவசரப்பட்டு வாக்குறுதி வழங்கி விட்டோமோ..! என எண்ணி இருக்கிறேன். அந்த அளவிற்கு நக்கீரன் கோபால் என்னை ஈர்த்தார்.‌ அதனால் இந்த விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என அவரை மட்டும் நான் நேரில் சென்று அழைப்பு விடுத்தேன்.

ஒரு சிறுகதை கூட எழுதாத என்னை நிர்பந்தத்தின் பெயரில் ஒரு தொடர்கதை எழுத வைத்த நண்பர் கலைச்செல்வன், வெயில் மற்றும் வேலுக்கும் இந்த தருணத்தில் நன்றி.‌

2025 எனக்கு மிகக் கடுமையான போராட்டங்களையும், சங்கடங்களையும் நெருக்கடிகளையும் கொடுத்தது.  இதிலிருந்து என்னை மீட்டு இந்த விழா மேடை வரை இழுத்து வந்தது நண்பர் வெயிலின் அறிவுரை தான். இதற்கு மாற்றாக இந்த 2025 தயாரிப்பாளர் யுவராஜ் எனக்கு சிறந்த நண்பனாக மாற்றி இருக்கிறது.

இந்த நாவலின் முகப்புரையில் ‘சமர்ப்பணம் என் மரிக்கொழுந்து’ என இருக்கும். இதைப் பார்த்த வாசகர்கள் பலரும் என்னிடம் யார் அந்த மரிக்கொழுந்து? என கேட்டனர். அது இந்த கதையில் வரும் கதாபாத்திரத்தின் பெயர் மட்டும்தான்.

சங்காரத்தை எழுதத் தூண்டியது ஒரே ஒரு சம்பவம் தான் . அதனை எழுத்தாளர் வெயில் குறிப்பிட்ட சம்பவம் தான். அந்த சம்பவத்தை நிகழ்த்திய ஒரு இளைஞன் என்னுடைய நண்பர் தான் அவர்தான் அதனை விவரித்தார்.  நாங்கள் ஆறு பேர் ஒருவனை வெட்டி வீழ்த்துவதற்காக கையில் அருவாளுடன் அவனை விரட்டி சென்று கொண்டிருக்கிறோம். ஓடிக்கொண்டிருந்தவன் ஒரு இடத்தில் யு டேர்ன் போட்டு எங்களை எதிர்த்து நின்று விட்டான். நாங்கள் பயந்து விட்டோம் இதுபோல் ஓடிக் கொண்டிருப்பவர்கள் யாரும் திடீரென்று எதிர்த்து நிற்பதில்லை. அவன் நின்றதால் நாங்கள் பயந்தோம். அப்போது அந்த இளைஞன் என்னை கொலை செய்யாதீர்கள் என்று கெஞ்ச போவதில்லை. உங்களிடமிருந்து தப்பிக்கவும் முடியாது. தாராளமாக வெட்டுங்கள். ஆனால் அதற்கு முன் நீங்கள் யார்? நான் உங்களை பார்க்கவே இதற்கு முன் பார்க்கவே இல்லை. என்னை கொலை செய்ய சொன்னது யார்? எனக் கேட்டான். கேட்கும் தருணத்தில் அவன் மீது அருவாள் வெட்டு விழுகிறது. அவன் இறந்து போகிறான். அந்த இளைஞரிடம் அவன் சாவதற்கு முன் கேட்ட கேள்விக்கு பதில் அளித்திருக்கலாமே? எனக் கேட்டேன்.  அப்போது அந்த இளைஞன் எனக்குத் தெரியாதே என பதில் அளித்தார். சாகிறவனுக்கு எதற்காக சாகிறோம் என்று தெரிவதில்லை. கொல்பவனுக்கு ஏன் கொல்கிறோம்? என்றும் தெரியாது. கூலிக்கு வேலை செய்வது போல் கூலிக்கு கொலை செய்கிறார்கள். இந்த கொடூரம் இந்த அளவிற்கு இந்த மண்ணில் பரவி இருக்கிறது. இது ஆபத்தானது. இந்த ஆபத்தை மக்களுக்கு புரிய வேண்டும் என நினைத்தேன்.

குறிப்பாக யார் வேண்டுமானாலும் யாராலும் கொல்லப்படலாம். அற்ப தொகைக்காக கூட கொலை செய்யப்படலாம்‌ எனும் அபாய சூழலை சொல்ல வேண்டும் என நினைத்தேன்.

இப்படி கதை இருந்தாலும் இந்த நூலில் இடம் பிடித்திருக்கும் கார்த்திகா – மரிக்கொழுந்து – சுமதி – என நிறைய பெண் கதாபாத்திரங்கள் தான் ஒவ்வொரு சூழலையும் தீர்மானிக்க கூடியவர்களாக இருப்பார்கள். ஏனெனில் பெண்களை ஒருபோதும் கணிக்க இயலாது.

ஒரு பெண் சிரிப்பதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கும். வெறுப்பதற்கும் ஆயிரம் காரணங்கள் இருக்கும்.. உளவியல் பகுப்பாய்வு செய்தாலும் பெண்களின் மனதை ஒருபோதும் கண்டுபிடிக்க இயலாது. அதனால் பெண் மீது நம்பிக்கை வையுங்கள். காதல் செய்யுங்கள். அன்பு செலுத்துங்கள்.

இந்த சங்காரம் வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் ” என்றார்.

You missed

*“வா வாத்தியார்” திரைப்பட முன் வெளியீட்டு  விழா !!* ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரிப்பில், முன்னணி நட்சத்திர நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கியுள்ள திரைப்படம் “வா வாத்தியார்”. இப்படம் பொங்கல் கொண்டாட்டமாக உலகமெங்கும் ஜனவரி 14 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், படக்குழுவினர் இன்று  பத்திரிக்கை ஊடக பண்பலை நண்பர்களைச் சந்தித்து படம் குறித்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்வினில் *கலை இயக்குநர் கிரண் பேசியதாவது..,* எனக்கு பிடித்த இயக்குநர் நலன், அவரது இரண்டாவது படத்தில் என்னை நடிக்க வைத்தார் அவர் இப்படத்தில் ஆர்ட் டைரக்டராக வேலை செய்யச் சொன்னார். இந்தக்கதை கேட்ட போது எப்படி இப்படத்தில் கார்த்தி நடிக்கப்போகிறார் என்று தான் தோன்றியது. நான் ரஜினி ரசிகன்,  என் அம்மா எம் ஜி ஆர் ரசிகர். ஷீட்டிங்கில் கார்த்தியைப் பார்த்த போது அவர் முகம் எம் ஜி ஆர் போட்டோவுடன் அப்படியே  மேட்ச் ஆனது. அப்போதே இந்தப்படம் பெரிய வெற்றி பெறும் என நலனிடம் சொன்னேன்.  கண்டிப்பாக இப்படம் உங்கள் அனைவரையும் கவரும் நன்றி. *நடிகர் GM சுந்தர்  பேசியதாவது..,* எம் ஜி ஆர் பற்றி பேச  எனக்குத் தகுதியில்லை, பரம ரசிகர்  சத்தியராஜ் சார் முன் எம் ஜி ஆர் பற்றி எதாவது தகவல் தப்பாகக் கூறி விடுவோம் என பயமாக உள்ளது. அவர் அவ்வளவு தீவிரமான ரசிகர்.  கார்த்திக்கின் சிரிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும். ஒரு ஐகானிக் இமேஜை மீண்டும் திரையில் கொண்டு வருவது மிக கடினமான விசயம்.  எம் ஜி ஆராக நடிக்க கார்த்தி நிறைய ஹோம் ஒர்க் பண்ணியிருக்கிறார். அவரது பாடி லாங்குவேஜு எல்லாம் மிகவும் நன்றாக  இருக்கிறது. அவருக்கு என் வாழ்த்துக்கள். முழு அர்ப்பணிப்புடன் உண்மையாக உழைத்தால் தான்  அந்த மாதிரி விஷயங்கள்லாம் வெளிவரும்.  கார்த்தி மிகச்சிறப்பாகச் செய்துள்ளார்.  கிருத்தி ஷெட்டி  வெல்கம் டு தமிழ் சினிமா.  நான்  ஆனந்தராஜனோட கிளாஸ்மேட் ஃபிலிம் இனஸ்டிட்யூட்டில். அவருடன் நடித்தது மகிழ்ச்சி. இயக்குநர் நலன் அவரது காதலும் கடந்து போகும் படம் போலவே, இந்த படத்திலேயே எனக்கு ஒரு நல்ல ரோல் கொடுத்திருக்கார். அவருக்கு ரொம்ப நன்றி. இந்தப்படம் வெளிவருதற்குத் தயாரிப்பாளர்  ஞானவேல் சார் மற்ற எல்லா நடிகர்களும் ஆர்டிஸ்ட் எல்லாருமே சேர்ந்து எவ்வளவோ கஷ்டப்பட்டிருக்கிறார்கள் என்பது தெரியும். மிகக்கஷ்டபட்டு  இந்த படத்தைப் பொங்கலுக்குக் கொண்டு வந்துவிட்டார்கள்.  நிச்சயமாகச் சத்தியமாக இந்த படம்  மிகப்பெரிய வெற்றி பெறும். *நடிகை ஷில்பா மஞ்சுநாத் பேசியதாவது..,* முதலில் எனக்கு மாலினி என்ற கதாபாத்திரத்தைக் கொடுத்ததற்காக, எங்கள் இயக்குநர் நலன் குமாரசாமி   சாருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி. ஒரு கதையை எழுதும்போது, ஒரு கேரக்டர்க்கும் ஒரு ஆர்க் இருக்கும். ஆனால் ஒரு நடிகையா, எனக்கும் ஒரு ஆர்க் வேண்டும், எல்லா விதமான கதாபாத்திரங்களையும் செய்ய வேண்டுமென்று  ஆசைப்படுவேன். அதனால் தான் இப்படத்தில்  இந்த மாதிரி ஒரு ரிஸ்க் எடுத்தேன். அந்த ரிஸ்க் எடுக்கும்போது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது. அதனால தான் மாலினி இவ்வளவு அழுத்தமான ஒரு கேர்கடராக மாறியிருக்கிறாள். இந்த படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் இருவரின் முயற்சியையும் உழைப்பையும் முதலில் பாராட்ட வேண்டும். இந்த படம் பெரிய சிக்கல்களைச் சந்தித்தது. எங்கள் இயக்குநர் நலன் குமாரசாமி   சாருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி. இந்த மாதிரி ஒரு பெரிய மேடையில், இந்த அளவுக்கு இந்த படம் நிற்கிறது என்றால், அதற்கு முழுக் காரணமும் அவர்கள்தான். படக்குழுவிற்கு நன்றி.  எனக்கு வரும் படங்கள் ஏதாவது ஒரு காரணமாகத் தான் வரும். இந்தப் படம் ஒரு ஸ்டார் படம். தமிழ்நாட்டில் இது ஒரு பெரிய திருவிழா வெளியீடாக இருக்கும்,  அதனால்  இதுபோன்ற ஒரு படத்தைத் தேர்வு செய்வது ரொம்ப சிக்கலான விஷயம். ஆனா எனக்கு உண்மையிலேயே நம்பிக்கை இருக்கிறது. இந்த படம் மிக நன்றாக வந்திருக்கிறது. நீங்க எல்லாரும் இந்த படத்தைப் பார்த்து ஆதரவு தர வேண்டும் நன்றி. *நடிகர் ஆனந்த்ராஜ் பேசியதாவது..,* இந்த படம் ஒரு நல்ல படம். நீங்களும் பார்த்தாலே அது உங்களுக்குப் புரியும். நாளைக்கு இந்த படம் வெளியாகப் போகிறது. அதுவும் ஒரு நல்ல நாளில், ஒரு நல்ல நேரத்தில் வெளியாகிறது. நான் தயாரிப்பாளர் ஞானவேல்  சார்கிட்ட கூட “சார், முன்னாடி சொன்ன தேதியை விட, நாளைக்கு ரிலீஸ் ஆகுற தேதியே ரொம்ப நல்ல தேதிங்க” என்று சொன்னேன். நாளை போகி பண்டிகை. பழசுகளை எல்லாம் எரிச்சிட்டு, புதுசா ஆரம்பிக்கிறதுதான் நம்ம கலாச்சாரம். அதனால் நாளைக்கு நம்ம மனசில் இருக்கிற எல்லா பழைய விஷயங்களையும் விட்டுவிட்டு, ஒரு புதுசா ஆரம்பிக்கிற படம்தான் ‘வா வாத்தியார்’. இன்று  காலை நானும், கார்த்தி சாரும், சத்யராஜ் சாரும் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் சமாதிக்கு போயிருந்தோம். அங்க போனப்போ ஒரு சந்தோஷம், ஒரு மன நிறைவு இருந்தது. அவர் சமாதியை நேரில் போய் பார்த்து, எங்களோட கண்ணீர் அஞ்சலியை செலுத்திட்டு, இந்த படத்தை உங்களுக்குக் கொண்டு வர்றதுல எனக்கு ஒரு பெருமை இருக்கிறது. உங்களால முடிந்தவரை இந்த படத்தை அவருக்கான மரியாதையா நினைச்சு, எங்களுக்கும் கொஞ்சம் ஆதரவு தாருங்கள். இந்த படம் நன்றாக வெற்றி பெறும் என்று  எங்களுக்கு முழு நம்பிக்கை இருகிறது .இந்த படத்தில் நடித்த கார்த்தி சார், சத்யராஜ் சார் கிட்ட இருந்து தான் நிறைய விஷயங்கள் கற்றுக்கொண்டார். அவர் ஒரு சீனியர், ஒரு அண்ணன் மாதிரி. இந்த படத்தோட இயக்குநர் நலன் சார் – ரொம்ப பெரிய, அனுபவம் வாய்ந்த இயக்குநர். அவர் கதையை நேரில வந்து சொன்னபோதே “சார், நீங்க சொல்லவே வேண்டாம்… நான் செய்கிறேன்”என்று உடனே சொன்னேன். இந்த படம் மிக நன்றாக இருக்கும்.  புரட்சித் தலைவரை மீண்டும் திரையில் பார்க்கவேண்டுமென்று ஆசைப்பட்டால், இந்த படத்தைக் கண்டிப்பா பாருங்க. அனைவருக்கும் நன்றி. நடிகர் சத்யராஜ் பேசியதாவது..,  எம் ஜி ஆர் பற்றிப் பேசினால் அது தனியா ஒரு கதையாக போய் வ்டும். இந்த படத்தோட தயாரிப்பாளர் தம்பி ஞானவேல் ராஜா பற்றி ஒரு விஷயம் சொல்லவேண்டும். அவருடைய அப்பா ஒரு தீவிரமான எம் ஜி ஆர் ரசிகர். அவர் 110 தடவை  நாட்டோடி மன்னன் படம் பார்த்ததாக சொன்னார். அவ்வளவு தீவிர ரசிகர். அப்படிபட்ட தயாரிப்பாளருக்கு அவர் இந்தப்படம் அமைந்தது மகிழ்ச்சி. கார்த்திக்கு முதல் படமே மிக சவாலான படம். வெளிநாட்டில் படிச்சிட்டு வந்து, அந்த மாதிரி ஒரு கிராமத்துக் கதாபாத்திரம் பண்ணுறது எளிமையானது இல்லை.  ஆனால் அதைவிட கஷ்டமான விஷயம் இந்த வாத்தியார் கதாபாத்திரம். ஏனென்றால் இது ஒரு தலைவரின் பெயரோட சம்பந்தப்பட்ட கதாபாத்திரம். ஆனால் அதைத்தாண்டி இந்தப்படத்தில் எம் ஜி ஆர் பாடி லாங்குவேஜை கொண்டு வந்து அசத்திவிட்டார். கிருத்தி ஷெட்டி, ஷில்பா, தம்பி ஆனந்த்ராஜ், தம்பி சுந்தர்  எல்லோரும் சிறப்பாக நடித்துள்ளனர். ஐம்பது வருடம் முன் கோவையிலிருந்து வந்த போது,  பல் பெரிதாக இருக்கிறது என சிவக்குமார் அண்ணன் சிபாரிசில் டாக்டரிடம் சென்று பல்லைக் குறைத்தேன். ஆனால் நலன் இப்படத்தில் உங்கள் கதாப்பாத்திரம் வித்தியாசமாக வேண்டுமென பல் வைக்க வைத்து விட்டார்.  இப்படத்தில் நான் வில்லனாக நடித்துள்ளேன்.  எம் ஜி ஆரின் பொங்கல் படம் படம் போல இந்தப் பொங்கலுக்கு வா வாத்தியார் வருகிறது அனைவரும் கொண்டாடுங்கள் நன்றி. *நடிகை கிருத்தி ஷெட்டி பேசியதாவது..,* ஒரு பேட்டியில்  நலன் சார் ஒரே விஷயத்தை *“இது ஒரு பெஸ்டிவல் படம். பல குடும்பங்கள் ஒன்றாகச் சேர்ந்து வந்து பார்க்கிற படம்”*என்று சொன்னார். இப்போது அது அப்படியே நடந்துள்ளது. குடும்பமா, நண்பர்களோடு, எல்லாரும் சேர்ந்து படம் பார்க்கிற மாதிரி இந்த படம் மாறியிருக்கிறது. அதுக்கு நான் ரொம்ப ரொம்ப சந்தோஷப்படுறேன். இந்த படம் தாமதமானது பற்றி நிறைய பேர் என்கிட்ட கேட்டார்கள். அந்த நேரத்தில் எனக்கும் கொஞ்சம் வருத்தமா தான் இருந்தது. ஆனால் நான் ஒன்று நம்புகிறேன் – நல்ல விஷயம் நடக்கவேண்டுமானால், அதுக்கு ஒரு சரியான நேரம் இருக்கும். கடவுள் நம்மளை காத்திருக்க வைக்குறார்னா,அதுக்குப் பின்னால் ஒரு பெரிய திட்டம் இருக்கும்னு நம்புறேன். அதனால இப்போ எல்லாம் சரியா நடந்ததுக்கு நான் ரொம்ப மகிழ்ச்சியா இருக்கிறேன். இந்தப்படத்தில் என்னைச் சேர்த்ததுக்காக நலன் சார், மற்றும் ஞானவேல் சார்  இருவருக்கும் என் மனமார்ந்த நன்றி. நலன் சார் இந்த படத்திற்காக எவ்வளவு கடினமா உழைத்திருக்கார்னு நான் நேரில பார்த்திருக்கேன். அவர் வெற்றியைப் பார்க்க ஆவலாக இருக்கிறேன்.  கார்த்தி சாரின் தீவிர ரசிகை நான், ஆனால் அவரை நேரில சந்திச்ச பிறகு, நான் இன்னும் பெரிய ரசிகையா மாறிவிட்டேன். ‘வா வாத்தியார்’ கதாபாத்திரம் – பெரியதாக  இருந்தாலும்,  அதை அவரைவிட சிறப்பாக யாராலும்  செய்ய முடியாது. கார்த்தி  மனதளவில் மிகச்சிறந்த மனிதர். அது அவரது கதாப்பாத்திரங்களிலும் பிரதிபலிக்கிறது, வா வாத்தியார் ஒரு நல்ல மனசு கொண்ட கேரக்டர் அது அவருக்குள்ள இயல்பாகவே இருக்கிறது. நான் அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன். சந்தோஷ் நாராயணன் இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. இப்படத்தில் உழைத்த அத்தனை கலைஞர்களுக்கும் நன்றி. அனைவருக்கும் நன்றி *தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேசியதாவது..,* சில படங்கள் சரியாகப் போகவில்லை, அதனால் நெகடிவிட்டி, நிறையக் செய்தி பரவி விட்டது. ஆனால் நான் இங்கு தான் இருக்கிறேன். அவருக்கு அவ்வளவு கடன் இருக்கிறது எனச் சொல்லுகிறார்கள். ஆனால் இண்டஸ்ட்றியில் கடனே இல்லாத தயாரிப்பாளர் நான் தான். நான் நன்றாகத் தான் இருக்கிறேன். முக்கியமாகச் சிலருக்கு நன்றி சொல்ல வேண்டும். முதலில் சூர்யா அண்ணாவுக்கு நன்றி. பல நண்பர்கள் மேடையில் ஆதரவாக பேசி விட்டு, காணாமல் போய் விடுவார்கள்.  ஆனால் சூர்யா அண்ணன் எப்போதும் எதுவானாலும் என்னுடன் இருந்து, என்னைப் பார்த்துக்கொண்டிருக்கிறார் அண்ணாவுக்கு நன்றி. KVN அண்ணா, அவர்களின் ஜனநாயகன் படம் பெரிய புக்கிங் ஆகியிருந்தது,  விஜய் சாரின் கடைசிப்படம் ஆனால் அது வருவது தாமதமாகியுள்ளது. ஆனால் இப்படம் வெளிவருவதில் எனக்கு  அவர் எனக்கு பெரிய துணையாக இருந்தார்.  அவருக்கு என் நன்றிகள்.  பென் மூவிஸ் ஜெயந்திலால் காடா சாருக்கு நன்றி. சக்தி பிலிம்ஸ் சக்திவேலனுக்கு நன்றி. பல நண்பர்கள் உறுதுணையாக இருந்தார்கள் அனைவருக்கும் நன்றி.  TTT படம் வருகிறது கண்ணன் ரவி சார்  இப்படத்திற்கும் பெரிய உதவிகள் செய்தார் அவர் படமும் பெரிய வெற்றி பெறட்டும். இப்படத்தில் எல்லோரும் மிகச்சிறந்த நடிப்பைத் தந்துள்ளார்கள். படம் 2 மணி நேரம் 9 நிமிடங்கள் தான், தீயாகப் பறக்கும். படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும். நன்றி. *நடிகர் கார்த்தி பேசியதாவது..,* கடந்த வருடம்,  பெரிய  செலிப்ரேஷனோட இந்த படத்தை வெளியிட  நாங்கள் திட்டமிட்டோம். ஆனால் அது தள்ளிப்போய்விட்டது. எனது முதல் படமும் இது போல  தள்ளிப்போனது. அடுத்த படம் தள்ளிப்போனது.  அதனால தாமதம் என்கிறது எங்களுக்கு புதுசு இல்லை – பழகிவிட்டது. இந்த சூழ்நிலையில், நான் ஞானவேல்ராஜா சார்கிட்ட எப்போதும் ஒரு விஷயத்தை மட்டும் தான் சொன்னேன். “நீங்கள்  நான் என்ன நினைக்கிறேனென்று நினைக்கவே வேண்டாம். உடலைப் பார்த்துக்கொள்ளுங்கள் என்றேன். நாம் போராட்டத்தில் உடலைக் கவனிக்காமல் விட்டுவிடுகிறோம். சின்ன வயதில் என் அப்பா ஒவ்வொரு அரிசியிலும் யார் யார் பெயர் எழுதப்பட்டுள்ளதோ அவர்களுக்குத்தான் அது கிடைக்கும் என்பார். அது போல் சினிமாவில் ஒவ்வொரு ஃப்ரேமிலும் யார் பெயர் எழுதப்பட்டுள்ளதோ அவர்களுக்குத்தான் அது கிடைக்கும். அவர் சொன்னது அப்போது புரியவில்லை இப்போது புரிகிறது ஞானவேல்ராஜா சார் சொன்ன மாதிரியே,நான் நிறைய பேருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கேன். முக்கியமாக சூர்யா  அண்ணா. அவரோட சப்போர்ட் இல்லாமல் இந்த படம் இப்படி ரிலீஸ்  ஆகி இருக்க முடியாது. அதே மாதிரி பைனான்ஸியர்ஸ், டிஸ்ட் ரிபியூட்டர்ஸ்,  எக்ஸிபிட்டர்ஸ், டெக்னீஷியன்ஸ் எல்லாருக்கும் என் மனமார்ந்த நன்றி. 48 மணி நேரம், 50 மணி நேரம், தூங்காம வேலை செய்து, இந்த படத்தை நம்ம கைக்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்கள். எல்லா தொழிலாளர்களுக்கும் நான் மனதார நன்றி சொல்லிக் கொள்கிறேன். நலன் சார் எல்லாருக்கும் பிடிச்ச ஒரு இயக்குநர். ரசிகர்களுக்கு மட்டுமல்ல ஆர்டிஸ்ட்களுக்கும், இயக்குநர்களுக்கும் பிடித்த இயக்குநர்.  அவர் இந்த கான்செப்ட் கொண்டு வந்தப்போ, எனக்கு ரொம்ப பயமா இருந்தது. இந்த கேரக்டருக்கு ஒரு தனி டிரெய்னிங் வேண்டும். ஆனால் நான் டிரெய்னிங் எடுத்து வரவில்லை. On-set-ல கற்றுக்கொண்டேன், மிகவும் சின்சியராக பண்ண முயற்சி செய்துள்ளேன்.ஒவ்வொரு நாளும், எம் ஜி ஆர் சாரோட படங்களைத் திரும்பத் திரும்ப பார்த்து, அவரோட close-ups பார்த்து, “என்னோட முகத்துல அதை எப்படி கொண்டு வரலாம்?”ன்னு யோசிச்சுக்கிட்டே இருந்தேன். எனக்கு என்னோட முகத்தையே சரியா பார்க்க முடியாத பயம் இருந்தபோது, அவரோட முகத்தை screen-ல கொண்டு வரணும்னு நினைத்ததே ரொம்ப பயமாக இருந்தது. ஆனால் நலன் மாதிரி ஒரு இயக்குநர், ஜார்ஜ் மாதிரி ஒரு கேமராமேன், அந்த முழு குழுவின் சப்போர்ட் இருந்ததால “இத பண்ண முடியும்”ன்னு ஒரு நம்பிக்கை வந்தது. அது படத்தில் சாத்தியமாகியுள்ளது. சந்தோஷ் நாராயணன் அவர்களின் இசை இந்த படத்தை இன்னொரு லெவலுக்கு கொண்டு போயிருக்கிறது. எம் ஜி ஆர் திரையில் மட்டுமில்லை நிஜத்திலும் ஒரு ஹீரோவாக இருந்திருக்கிறார். அதை மாடர்னாக ரசிக்கக்கூடிய கமர்ஷியல் படமாக  செய்தது ரொம்ப பெரிய விஷயம். காலை அவர் சமாதிக்கு போய் கும்பிட்டு வந்தோம். அங்க நின்னப்போ உணர்வு வேற மாதிரி இருந்தது. நாற்பது வருஷமா அவர் இல்லை. ஆனா இன்னும் அவரை நினைக்கிறோம். இன்னும் அவரைப் பற்றி படம் எடுக்க ஆசைப்படுகிறோம். அங்கிருந்து திரும்பி வரும்போது, இந்த எல்லா விஷயங்களும் சரியாக அமைந்ததுக்கு அவரோட ஆசிர்வாதம் கண்டிப்பாக இருக்கிறது என்று நான் நம்புகிறேன். குழந்தைகளோடு, குடும்பமா, எல்லாரும் சேர்ந்து பார்த்து ரசிக்ககூடிய ஒரு ஜாலியான படம் இது. இந்த பொங்கலுக்கு  ரிலீஸ்  ஆகுற, ரிலீஸ் ஆகப்போகுற எல்லா படங்களும் மக்களைச் சந்தோஷப்படுத்தி பெரிய வெற்றி பெறவேண்டுமென்று மனசார வாழ்த்துகிறேன். நன்றி. இப்படத்தில் கார்த்தி நாயகனாக நடிக்க, சத்யராஜ், ராஜ்கிரண், கிருத்தி ஷெட்டி, ஜி. எம். சுந்தர், ஷில்பா மஞ்சுநாத், ஆனந்த்ராஜ், கருணாகரன், ரமேஷ் திலக், பி எல் தேனப்பன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். முன்னணி ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை டி. ஆர். கே. கிரண் கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை வெற்றி கையாண்டிருக்கிறார். அனல் அரசு சண்டை காட்சிகளை அமைத்திருக்கிறார். பெரும் பொருட்செலவில்  ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா இந்தத் திரைப்படத்தை பிரம்மாண்டமாக  தயாரித்திருக்கிறார்.   *இப்படம் பொங்கல் கொண்டாட்டமாக ஜனவரி 14 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.*

This will close in 0 seconds