‘சுப்ரீம் ஸ்டார்’ சரத்குமார், ‘இளைய கேப்டன்’ சண்முக பாண்டியன் விஜயகாந்த் இணைந்து நடிக்கும் ‘கொம்பு சீவி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

இயக்குநர் பொன் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கொம்பு சீவி’ திரைப்படத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் விஜயகாந்த், தார்னிகா, காளி வெங்கட் ,முனீஸ்காந்த், ஜார்ஜ் மரியான், சுஜித் சங்கர், கல்கி ராஜா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

கிராமிய பின்னணியிலான ஆக்ஷன் வித் காமெடி எண்டர்டெயினராக தயாராகி இருக்கும் இப்படத்தை ஸ்டார் சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் முகேஷ்.T.செல்லையா தயாரித்திருக்கிறார்.

பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.

வரும் 19ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த், எல். கே. சுதீஷ், விஜய பிரபாகரன், இயக்குநர்கள் எஸ். ஏ. சந்திரசேகரன், எம். ராஜேஷ், மித்ரன் ஆர். ஜவகர், நடிகர் ரியோ, நாயகர்கள் சரத்குமார் – சண்முக பாண்டியன் விஜயகாந்த், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியம், கலை இயக்குநர் சரவணன் அபிராமன், படத்தொகுப்பாளர் தினேஷ் பொன்ராஜ், நடிகர் கல்கி ராஜா, தயாரிப்பாளர் முகேஷ்.T.செல்லையா, இயக்குநர் பொன்ராம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகர் பேசுகையில், ”கொம்பு சீவி படத்தின் போஸ்டரை பார்க்கும்போது எனர்ஜியாக இருக்கிறது. கொம்பு சீவி என கிராமப்புறத்தில் காளையை குறிப்பிடுவார்கள். இதில் யார் கொம்பு சீவி என தெரியவில்லை. இரண்டு பேரும் அந்த அளவிற்கு இருக்கிறார்கள். கேப்டன் விஜயகாந்த் கண்களில் ஒரு நெருப்பு இருக்கும், ஒரு வேகம் இருக்கும். அந்த நெருப்பு கலந்த பார்வை சண்முக பாண்டியனிடமும் இருக்கிறது. ‘உனக்கு நான் சளைத்தவன் இல்லடா..!’ என சரத்குமாரும் அதில் ஆக்ரோஷமாக இருக்கிறார்.‌ அவரது கெட்டப் நன்றாக இருக்கிறது. ‘வயதானாலும் நான் கொம்பு சீவின காளை டா..!’ என்பது போல் இருக்கிறது அவருடைய தோற்றம். அந்த வகையில் இந்த போஸ்டரே படத்தின் வீரத்தை காட்டுகிறது.

இயக்குநர் பொன்ராமிடம் இருக்கும் நகைச்சுவை உணர்வு எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடைய இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் நகைச்சுவையை விட வேகம் – ஆக்ஷன் அதிகம் இருக்கும் என நம்புகிறேன். ஏனெனில் இன்றைய தலைமுறையினர் இதைத்தான் ரசிக்கிறார்கள் என தெரிந்து கொண்டு இப்படி ஒரு படத்தை கொடுத்திருக்கிறார். அவருடைய ஒவ்வொரு படமும் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன். ஏனென்றால் பொன்ராம் என்னுடைய பிள்ளைகளில் ஒருவர்.

இயக்குநர் ஒரு இளைஞர், ஹீரோ ஒரு இளைஞர், சரத்குமார் ஒரு இளைஞர், இசையமைத்த யுவன் ஷங்கர் ராஜா ஒரு இளைஞர். இப்படி இளைஞர்கள் புதிய வேகத்துடன் இணைந்திருக்கிறார்கள்.

உலகத்திற்கே உரிய ஒரு சரித்திரம் இருக்கிறது. மாற்றம் என்பது மட்டுமே மாறாதது. அது எல்லாத் துறையிலும் உண்டு. சமூகம்- அரசியல்- திரைத்துறை- என எல்லாத் துறையிலும் இது உண்டு. எனக்குத் தெரிந்து திரையுலகில் ஒரு காலத்தில் எம் கே தியாகராஜ பாகவதர்-பி யு சின்னப்பா, அதற்குப் பிறகு எம்ஜிஆர்-சிவாஜி, ரஜினி-கமல் அதற்குப் பிறகு இன்றைய சூப்பர் ஸ்டார்கள் என மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. இதை யாராலும் மாற்ற முடியாது. இது காலத்தின் கட்டாயம். ஆகவே மாற்றத்திற்குரிய இளைஞர்கள் வெற்றி பெற வேண்டும். ஏனெனில் இந்த இளைஞர்களும், தமிழகத்தில் உள்ள மக்களும் ஒரு மாற்றத்தை விரும்பி கொண்டிருக்கிறார்கள். அந்த மாற்றம் இந்த திரைப்படத்திலும் நிகழ வேண்டும், வாழ்த்தி விடைபெறுகிறேன், நன்றி,” என்றார்.

நடிகர் ரியோ பேசுகையில், ”கொம்பு சீவி படத்திற்கு வரவேற்பு வழங்க உள்ள அனைவருக்கும் நன்றி. சிவகார்த்திகேயனை வைத்து ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’, ‘சீமராஜா’ என மூன்று படங்களை இயக்கிய ஒரே இயக்குநர் பொன்ராம். மூன்று திரைப்படங்களையும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பினால் குடும்பம் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பார்த்து ரசிப்பார்கள். தொலைக்காட்சி பார்வையாளர்களின் ரேட்டிங் கணக்குப்படி தமிழில் முதன்மையான இடத்தை பிடித்திருக்கும் திரைப்படம் சீம ராஜா. இதை நான் ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் ‘பிராப்பரான டெலிவிஷன் மூவி’ என்றால் இயக்குநர் பொன் ராமிற்கு தான் அதில் முதலிடம். நான் அவருடைய இயக்கத்திற்கு மிகப்பெரிய ரசிகன். நிறைய சிரித்து ரசிக்க கூடிய படங்களை உருவாக்கக்கூடிய இயக்குநர் அவர். அவருடைய இயக்கத்தில் சண்முக பாண்டியன் நடித்திருக்கும் இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்.

இந்த திரைப்படத்தின் முன்னோட்டத்தை பார்க்கும் போது காமெடியும், ஆக்ஷனும் அதிகம் இருக்கிறது. இது படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பொன் ராமின் இயக்கத்தில் எங்கள் தலைவர் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் உருவாகி இருக்கும் படம் இது. கிராமிய பின்னணியிலான படங்களுக்கு யுவன் ஷங்கர் ராஜாவின் இசை ஸ்பெஷலாக இருக்கும். உதாரணத்திற்கு ‘பருத்திவீரன்’, சமீபத்தில் வெளியான ‘ விருமன்’ என பல படங்களை குறிப்பிடலாம். இது போன்ற படங்களுக்கு அவருடைய இசை மண்ணின் இயற்கையான மணத்தையும் மண்ணின் ஆழத்தையும் வெளிப்படுத்தும்.

கேப்டனின் மனசு அவருடைய வாரிசுகளுக்கும் இருக்கும் என்பதை விஜய பிரபாகரன் நிரூபித்திருக்கிறார். அண்மையில் அவர் பாலாவின் படத்தை பார்த்து பாராட்டியதே இதற்கு சான்று.‌

சரத்குமார் நடித்த ‘அரவிந்தன்’ படத்தின் மூலமாகத்தான் யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பாளராக அறிமுகமானார். அன்று பார்த்தது போலவே இன்றும் சரத்குமார் இளமையாக இருக்கிறார். அவரை ஓல்டு கெட்டப் போட்டு தான் வயதானவராக காண்பிக்க வேண்டியது இருக்கிறது. யுவனின் இசை எப்படி இளமையாக இருக்கிறதோ, அதேபோல் சரத்குமாரும் இருக்கிறார். அவரும் இந்த படத்தில் இருப்பதால் இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்,” என்றார்.

பாடலாசிரியர் சினேகன் பேசுகையில், ”இந்த மேடை என் மனதிற்கு நெருக்கமான மேடை. நிகழ்வு தொடங்கிய தருணத்திலிருந்து இதுவரை பாசத்தின் குழுமமாகத்தான் இங்கு அனைவரும் வந்திருக்கிறார்கள். இதற்காக வாய்ப்பளித்த இயக்குநர் பொன்ராமிற்கு நன்றி.

இயக்குநர்கள் பொன்ராம் மற்றும் ராஜேஷ் ஆகியோர் எஸ். ஏ சந்திரசேகரின் உதவியாளர்களாக பணியாற்றும் தருணத்திலேயே என்னுடைய நண்பர்கள். ஆனால் நான் அவர்களுடைய எந்த படத்திலும் நான் பாடல் எழுதவில்லை. கொம்பு சீவி படத்தை இயக்கப் போகிறார் என்று கேள்விப்பட்டதும் இயக்குநர் பொன்ராமை சந்தித்து இந்த படத்தில் என்னுடைய பங்களிப்பு இருக்க வேண்டும் என உரிமையுடன் கேட்டேன். ஏனெனில் கேப்டன் மீது வைத்திருக்கும் நட்பின் காரணமாகவே கேட்டேன்.‌

பாடல் எழுதுவதற்கான வாய்ப்பு கிடைத்தவுடன் நான் ‘ராஜ்ஜியம்’ படத்தில் ‘தமிழன் தமிழன்..’ என்பது போன்ற பாடல் எழுதுவதற்கான சூழல் போன்று தான் கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் சண்முக பாண்டியன் நடிக்கும் இந்த படத்தில் கமர்ஷியல் பாடலை எழுதுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. இருப்பினும் கேப்டனுக்கு எழுதியது போல் அசைக்க முடியாத பாடல் ஒன்றை சண்முக பாண்டியனுக்காக விரைவில் எழுதுவேன். இதற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

‘பருத்திவீரன்’ படத்தில் எல்லா பாடல்களையும் நான் தான் எழுதினேன். இதுபோன்ற கிராமியத்தை நினைவுபடுத்தும் படத்திற்கு பாடல் எழுத வாய்ப்பளித்த யுவனுக்கும், இயக்குநருக்கும் நன்றி.‌

எங்கள் வீட்டு பிள்ளை சண்முக பாண்டியனுக்கு மிகப்பெரிய அளவில் படத்தை தயாரித்து வெளியிடும் தயாரிப்பாளர் முகேஷ் செல்லையாவிற்கு ஒட்டுமொத்த திரையுலகமும் வாழ்த்து தெரிவிக்க வேண்டும். அவர் கேப்டன் மீது வைத்திருக்கும் அன்பின் காரணமாகவே இது நடைபெற்றது. இதற்காகவும் இந்த படம் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்.

கேப்டனுடன் ஆறு, ஏழு படங்களில் பணியாற்றி இருக்கிறேன். என்னுடைய வாழ்க்கையில் முதன் முதலாக கேப்டன் நடிப்பில் உருவான ‘வாஞ்சிநாதன்’ படத்திற்கு பாடல் எழுதுவதற்காக தான் சென்னையில் இருந்து மும்பைக்கு விமான பயணம் மேற்கொண்டேன். அது மறக்க முடியாது. அவரைப் பற்றிய நினைவுகள் ஏராளம்.‌ அதைப் பற்றி பேசிக் கொண்டே இருக்கலாம்.

அந்த வகையில் சண்முக பாண்டியன் திரையுலகில் வளர்ந்தால் நாங்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சி அடைவோம். கேப்டனுக்கு திருப்பி செலுத்த வேண்டிய அன்பை உங்கள் மீது செலுத்துவோம். அதற்கான களமும், காலமும் வருவதற்காக காத்திருக்கிறோம். நீங்கள் அன்பால் உருவான குழந்தை. அன்பு ஒருபோதும் தோற்பதில்லை. அன்பு வெல்லும். சண்முக பாண்டியன் நடிப்பில் உருவான கொம்பு சீவியும் வெல்லும் என நம்புகிறேன், வாழ்த்துகள்,” என்றார்.

இயக்குநர் எம் ராஜேஷ் பேசுகையில், ”சந்தோஷமாக இருக்கிறது. இந்த விழா ஒரு குடும்ப விழாவை போல் தான் இருக்கிறது. நானும் பொன்ராமும் உதவி இயக்குநர்களாக பணியாற்றிய காலத்தில் இருந்தே நண்பர்கள். ‘நண்பேன்டா..’ என சொல்லிக் கொள்வது போல உள்ள நண்பர்கள். அவருடைய வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்திலிருந்து இந்த கொம்பு சீவி படம் வரை நான் அவருடன் இணைந்து பணியாற்றி இருக்கிறேன். நண்பனாகவும் கதை விவாதத்தில் பங்கு கொண்டும் உதவி செய்து இருக்கிறேன். இதே போல் அவரும் என்னுடைய படங்களுக்கு உதவி செய்திருக்கிறார். எங்களுக்கு இடையேயான இந்த நட்பு இன்றும் தொடர்கிறது.

இந்தப் படத்தை நான் பார்த்து விட்டேன். மிகவும் பிடித்திருந்தது. திரையில் இரண்டு தூண்களாக சரத்குமார் – சண்முக பாண்டியன் தோன்றுகிறார்கள். இந்தப் படத்தில் சரத்குமார் எனர்ஜியுடன் கூடிய நடிப்பை வழங்கி இருக்கிறார். இந்தப் படத்தில் ஆக்ஷன் காட்சிகளிலும் மிரட்டி இருக்கிறார். நான் படத்தை பார்க்கும் போது நிறைய இடங்களில் சண்முக பாண்டியன் நடிப்பில் கேப்டனை பார்ப்பது போல் இருந்தது. திரையரங்கில் இந்த காட்சிகளை பார்க்கும் போது ரசிகர்களுக்கு குறிப்பாக கேப்டனின் ரசிகர்களுக்கு அற்புதமான தருணமாக இருக்கும்.

திரைக்குப் பின்னால் இரண்டு தூண்களாக ஒளிப்பதிவாளரும், இசையமைப்பாளரும் பணியாற்றியிருக்கிறார்கள். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும். படத்தின் முன்னோட்டத்தை மிகவும் ரசித்தேன்,” என்றார்.

இயக்குநர் மித்ரன் ஆர் ஜவகர் பேசுகையில், ”பொன்ராம் என்னுடைய பேவரைட் ஆன டைரக்டர். அவருடைய காமெடி திரைப்படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். இந்தப் படத்தின் முன்னோட்டத்தை பார்க்கும் போது அவருடைய இயக்கத்தில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற படங்களின் பட்டியலில் இருப்பதை போல் இருக்கிறது. இதற்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

சண்முக பாண்டியனை நான் சந்தித்து இருக்கிறேன். அவருடன் பகிர்ந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம் இருக்கிறது என்றால், அவருக்காக மிகப்பெரிய இடம் ஒன்று காத்திருக்கிறது. தைரியத்துடன் கண்ணை மூடிக்கொண்டு அதில் பயணம் செய்யுங்கள். எல்லா திறமைகளும் உங்களிடத்தில் இருக்கிறது. இவற்றையெல்லாம் விட உங்களுடைய அப்பா அம்மாவின் ஆசியும் இருக்கிறது என்பதை மட்டும் உறுதியாக சொல்வேன். திரையில் உங்களை பார்க்கும் போது வியப்பாக இருக்கிறது. இந்த படம் உங்களுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பு முனையாக இருக்கும்.

இந்த விழாவின் நாயகன் யுவன் ஷங்கர் ராஜா. அவருடன் நான் 15 ஆண்டு காலமாக பயணித்து வருகிறேன்.‌ அவருடைய இசையில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தின் பாடல்களும் படமும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்,” என்றார்.

விஜய பிரபாகரன் பேசுகையில், ”இந்த மேடையில் நிற்பதற்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. ஹீரோவோட அண்ணனாக இல்லாமல் சண்முக பாண்டியனின் ரசிகனாக இங்கு வந்திருக்கிறேன்.
சண்முகத்தை பற்றி சொல்ல வேண்டும் என்றால், 2012ம் ஆண்டில் இருந்து சினிமாவில் நடிக்க தொடங்கினார். சினிமாவில் 13 ஆண்டு காலமாக சண்முகம் பயணிக்கிறார். இந்த 13 ஆண்டு கால பயணம் எங்களுக்கு நிறைய விஷயங்களை கற்றுக் கொடுத்திருக்கிறது. இந்த 13 ஆண்டில் எத்தனையோ ஹீரோக்கள் எத்தனையோ படங்களை செய்து இருக்கலாம். ஆனால் இது சண்முகம் நடிக்கும் நான்காவது படம் தான். ஏனென்றால், நடுவில் அப்பாவிற்கு உடல்நிலை சரியில்லாத போது அவரை உடனிருந்து கவனித்துக் கொண்டது சண்முகம் தான். ‘எனக்கு படங்களில் நடிப்பதை விட அப்பாவுடன் இருந்து அவரை மீட்டு மீண்டும் தமிழக மக்களுக்கு தர வேண்டும்’ என உறுதியாக சொன்னார். அதனால்தான் அப்பா என்னை அரசியலில் ஈடுபடு என சொன்னார்.

நான் இதை ஏன் இங்கு சொல்கிறேன் என்றால், இந்தப் படத்தின் பணிகள் தொடங்கிய தருணத்திலிருந்து இதுவரை எந்த இடத்திலும் சிறு இடைவெளி கூட இல்லாமல் நடைபெற்று நிறைவடைந்து இருக்கிறது. இதற்கு முன் பல படங்கள் பற்றிய அறிவிப்பு வெளியானாலும் அவை முறையாக நடைபெறவில்லை. இருந்தாலும் அவன் எந்த சலனமும் இல்லாமல் நான் உறுதியாக வருவேன் என நம்பிக்கையுடன் இருந்தான். கேப்டனின் மகன் என்னால் முடியும் என தைரியத்துடன் இருந்தான். 13 ஆண்டுகளில் அவருடைய நண்பர்கள் சினிமாவில் ஜெயித்தாலும் சினிமா மீதான அவனுடைய ஆர்வம் சிறிதும் குறையவில்லை. இந்த தருணத்தில் ஸ்டார் சினிமாஸ் நிறுவனத்திற்கும், தயாரிப்பாளர் முகேஷ் செல்லையாவிற்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சண்முகத்திற்கு இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவிலான அறிமுகமாக இருக்க வேண்டும் என்று அயராது பாடுபட்டு வருகிறார்.

தயாரிப்பாளர் முகேஷ் சார், சண்முகத்தை வைத்து படம் இயக்க வேண்டும் என்று இயக்குநர் பொன்ராம் ஆர்வத்துடன் இருக்கிறார் என்று எங்களிடம் சொன்னதும் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தோம்.

நான் கல்லூரி படிக்கும்போது சிவகார்த்திகேயன்-பொன்ராம் கூட்டணியில் உருவான படத்தைப் பார்த்து ரசித்திருக்கிறேன். அந்த அளவிற்கு பெரிய இயக்குநரின் இயக்கத்தில் சண்முகம் நடிக்கப் போகிறான் என்றவுடன் சந்தோஷப்பட்டேன். வேறு யார் நடிக்கிறார்கள் என்று பார்த்தபோது பொன்ராம் இந்த படத்தில் சரத் சார் நடிக்கிறார் என்று சொன்னவுடன் எங்களுக்கு இரட்டிப்பு சந்தோஷம் ஏற்பட்டது.

புலன் விசாரணை காலகட்டத்தில் இருந்து கேப்டனும் சரத் சாரும் ஒன்றாகவே பயணித்திருக்கிறார்கள். இருவருக்கும் இடையேயான நட்பு தனித்துவமானது. இன்று அப்பா இல்லாத நிலையில் சண்முகத்தை அடுத்த கட்டத்திற்கு உயர்த்துவதற்காக சரத் சார் கை கொடுத்து ஆதரவு தருவதை பாசிட்டிவாகத்தான் பார்க்கிறேன்.

இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘வஸ்தாரா..’ பாடலில் சண்முகமும், சரத் சாரும் நடனமாடும் போது, யார் பெட்டர் என்று தான் நான் பார்த்துக் கொண்டிருந்தேன். ரெண்டு பேருமே நன்றாக ஆடினார்கள்.

யுவன் ஷங்கர் ராஜாவை நான் முதல் முறையாக ‘அலெக்ஸாண்டர் மூவி பி ஜி எம் – யுவன் ஷங்கர் ராஜா ‘ என்ற டைட்டில் வரும் போது தான் பார்த்தேன். அதற்குப் பிறகு இப்போது தான் அவரை நேரில் சந்திக்கிறேன். சந்தித்து பேச தொடங்கியவுடன் நிறைய விசயங்களை பகிர்ந்து கொண்டோம்.

‘சகாப்தம்’ படத்தின் பணிகளை தொடங்கும் போது கேப்டன் எங்களிடம் என்ன சொன்னார் என்றால், சண்முகத்தின் முதல் படத்தில் இளையராஜாவின் குடும்பத்திலிருந்து தான் இசை இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார். ‘சகாப்தம்’ படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்தார். சண்முகத்தின் அடுத்த படமான ‘படைத்தலைவன்’ படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். அவருடைய அடுத்த படமான ‘கொம்பு சீவி’ படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். கேப்டனின் ஆசை சண்முகத்தின் முதல் மூன்று படங்களிலும் நிறைவேறி இருக்கிறது. பவதாரணி கூட ‘சகாப்தம்’ படத்தில் ஒரு பாடலை பாடி இருக்கிறார். இதனாலேயே சண்முகத்திற்கு கேப்டனின் ஆசி பரிபூரணமாக இருக்கிறது என்பது உறுதியாகிறது.

அப்பா சின்ன வயதில் இருந்தே சினிமா என்றால் ஹீரோ, ஹீரோயின் மட்டும் இல்ல அதுல ஒர்க் பண்ற எல்லா டெக்னீஷியன் பெயரையும் நீ படிக்க வேண்டும் என சொல்வார். எல்லோரும் ஒன்றிணைந்து தான் ஒரு படத்தினை உருவாக்குகிறார்கள் என்பார். அதனால் இந்தப் படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு தேனியில் நடைபெற்ற போது நானும், அம்மாவும் சென்றிருந்தோம். அப்போது இந்த ‘உசிலம்பட்டி..’ பாடல் ஒலித்த போது அனைவரும் ரசித்தனர். இதை பார்த்த உடன் இந்த பாடல் மிகப்பெரிய ஹிட் ஆகும் என்று நான் நினைத்தேன். படம் வெளியான பிறகு இதற்காகவே நிறைய ரசிகர்கள் திரையரங்கிற்கு வருகை தருவார்கள். இது சண்முகத்தை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தும் என்று நான் நம்புகிறேன். அத்துடன் இது ஒரு புது கூட்டணி என்பதாகவும் பார்க்கிறேன். டிசம்பர் 19ம் தேதி அன்று கொம்பு சீவி மிகப்பெரிய வெற்றியை பெறும் என நம்புகிறேன்,” என்றார்.

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா பேசுகையில், ” நான் இந்த மேடையில் இருப்பதற்கு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். நிறைய பேச வேண்டும். நான் குழந்தை பருவத்தில் இருந்து கேப்டனின் படங்களை பார்த்து வளர்ந்திருக்கிறேன். கேப்டன் எனக்கு மிகவும் இன்ஸ்பயரிங்கான பர்சன்.

கேப்டன் திருமணம் ஆகி முதல் முறையாக தம்பதிகளாய் எங்களது வீட்டிற்கு விருந்திற்காக வருகை தந்தார்கள். அப்போது நான் , என்னுடைய உறவினர்கள் அனைவரும் அப்பாவின் இசையை ஒலிக்க விட்டு நடனமாடிக் கொண்டிருந்தோம்.

இயக்குநர் பொன்ராம் என்னை சந்தித்தபோது, யார் ஹீரோ என கேட்டேன். சண்முக பாண்டியன் என்று சொன்னது ஒரு வினாடி கூட தாமதிக்காமல் இப்படத்திற்கு இசையமைக்க ஒப்புக்கொண்டேன். கேப்டன் சார், ஏராளமானவர்களுக்கு பில்லராக இருந்திருக்கிறார். என்னுடைய சகோதரரான சண்முக பாண்டியனுக்கு சினிமாவில் நிச்சயமாக ஒரு பெரிய இடம் உண்டு.

சரத் சாரிடமிருந்து தொடங்கி இன்று சண்முக பாண்டியனுக்கும் பணியாற்றுகிறேன்.

இந்தப் படத்தின் திரைக்கதையை கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன். அதிலும் பொன்ராமின் டிரேட் மார்க் காமெடி காட்சிகள் சூப்பராக இருந்தன. அவருடன் பணியாற்றிய அனுபவம் ஜாலியாக இருந்தது.

கேப்டன் சார் நடித்த ‘தென்னவன்’ படத்திற்கு நான் இசையமைத்தேன். ‘அரவிந்தன்’ படத்திற்கு இசையமைப்பதற்கு முன் அண்ணன் கார்த்திக் ராஜா இசையமைத்த ‘அலெக்சாண்டர்’ படத்திற்கு நான் பின்னணி இசையமைத்தேன். அப்போது தயாரிப்பாளர் சுப்பு பஞ்சு , தான் அந்தப் படத்திற்கு பின்னணி இசையமைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அந்த படத்தில் ஒரு பாடலையும், பின்னணி இசையும் அமைத்தேன். இந்த வகையில் என்னுடைய திரையுலக பயணம் ‘அலெக்ஸாண்டர்’ படத்திலிருந்து தான் தொடங்கியது. இன்று கேப்டன் மகன் நடிக்கும் படத்திற்கு இசை அமைத்திருப்பது அவரின் ஆசியாகவும், எங்களுடைய குடும்பத்தினருக்கு பணியாற்றுவது போலும் இருக்கிறது,” என்றார்.

திருமதி பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், ”இங்கு இருக்கும் அனைவரும் கேப்டனை திருமணம் செய்து கொண்ட நாளிலிருந்து எனக்கு தெரிந்தவர்கள் தான், அறிமுகமானவர்கள் தான்.
யுவன் ஷங்கர் ராஜா பிறந்ததில் இருந்தே எனக்கு தெரியும். இளையராஜா சார், ஜீவா ஆன்ட்டி எங்களுடைய இதயத்திற்கு மிகவும் நெருக்கமானவர்கள். திரையுலகத்தில் எனக்கு சிலர்தான் நண்பர்கள். அதில் மிகவும் முக்கியமானவர் ஜீவா ஆன்ட்டி தான். அவர்கள் என்னுடைய இன்ஸ்பிரேஷன் என்றும் சொல்லலாம்.

அப்போதெல்லாம் எல்லா படங்களும் வெளியாகும். ஹீரோக்களை விட நாங்கள் மிகவும் பரபரப்பாக இருப்போம். இசைஞானி இளையராஜா இசையமைத்த எல்லா படத்திற்கும் பிரிவியூ காட்சி பார்க்க ஜீவா என்னை அழைப்பார்கள். கேப்டன் படம் என்றால் நான் என்னுடைய நண்பர்கள், தோழிகள் அனைவரையும் அழைப்பேன்.

பிரபாகரன், சண்முகம் போல் யுவனும் எனக்கு ஒரு பிள்ளை தான். எனக்கு எந்த பிரச்சனை என்றாலும் இளையராஜா குடும்பத்துடன் மனம் விட்டு பேசுவேன். அதேபோல் சரத்குமாருடனும் பேசுவேன்.

எங்களுடைய திருமணம் நடந்தது ஜனவரி 31 1990. அன்றுதான் ‘புலன் விசாரணை’ திரைப்படமும் வெளியானது. அன்று முதல் அவர்கள் இருவரிடத்திலும் உண்டான பிணைப்பு, நட்பு இன்று வரை உறுதியுடன் தொடர்கிறது. நடிகர் சங்க தலைவராக பணியாற்றிய போது சரத் சாரும் நெப்போலியன் சாரும் கேப்டனுக்கு இரண்டு கரங்கள் போல் இணைந்து செயல்பட்டார்கள். இப்படி பழைய நினைவுகளை நினைக்கும் போது ஒவ்வொன்றும் அற்புதமான தருணங்களாகத்தான் இருக்கிறது.

சண்முக பாண்டியன் நடித்த ‘சகாப்தம்’ படத்திற்கு தயாரிப்பாளர் எல் கே சுதீஷ். அவருடைய தாய் மாமாவாக மட்டும் இல்லாமல் அவருடைய அனைத்துமாக இன்று வரை அவர் இருக்கிறார்.‌

இந்தப் படத்தை நான் பார்த்து விட்டேன். இந்தப் படம் குடும்பம் குடும்பமாக திரையரங்கத்திற்குச் சென்று பார்த்து ரசித்து கொண்டாட கூடிய படமாக இருக்கும். இதனை தமிழக மக்கள் அங்கீகரிப்பார்கள்.

இந்தப் படத்தின் சிறப்பம்சம் என்ன என்றால், ராஜா சாரும், யுவனும் இணைந்து ஒரு பாடலை பாடியிருக்கிறார்கள். அம்மா பற்றிய சென்டிமென்ட் பாடல் என்றால் அது ராஜா சார் பாடினால்தான் சிறப்பு.

படத்தில் சண்முகமும் , சண்முகத்தின் தாய் மாமாவாக நடித்திருக்கும் சரத் சாரும் அடிக்கும் லூட்டி அனைவரையும் ரசிக்க வைக்கும். இவர்கள் இருவருக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. இருவரும் கடினமாக உழைத்திருக்கிறார்கள். டிசம்பர் 19ம் தேதியன்று கொம்பு சீவி படம் வெளியாகிறது. அனைவரும் திரையரங்கத்திற்கு சென்று பார்த்து, ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

இயக்குநர் பொன் ராம் பேசுகையில், ”மூன்றாண்டுகளுக்கு முன் தயாரிப்பாளர் முகேஷ் செல்லையாவை சந்தித்தேன். அவர்தான் சண்முக பாண்டியனை
வைத்து படம் இயக்க வேண்டும் என்ற எண்ணத்தை வெளிப்படுத்தினார். அதற்காக அவருக்கு என் முதல் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதன் பிறகு கேப்டனையும், சண்முக பாண்டியனையும் சந்தித்தேன். சண்முக பாண்டியனை நேரில் பார்த்ததும் திரைக்கதையில் சில மாற்றங்களை செய்ய வேண்டும் என மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்.

என்னை பொறுத்தவரை ஒரு படத்தை உருவாக்குவதற்கு இயக்குநர் மட்டும் பணியாற்றுவதுடன் தயாரிப்பாளரும் இணைந்து கிரியேட்டிவ்வாக பணியாற்ற வேண்டும் என எதிர்பார்ப்பவன். அந்த வகையில் இந்த படத்திற்கும், இந்த நிகழ்விற்கும் தயாரிப்பாளர் முகேஷின் பங்களிப்பும் அதிகம். இதை நான் பாராட்டுகிறேன்.

இந்தப் படத்தின் கதையைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை படமாக்கி கொண்டிருந்தபோது வைகை அணையின் உள்பகுதிக்கு சென்றேன்.‌ அங்கு மோட்டார் வைத்த கிணறு மூலம் பாசனம் செய்து கொண்டிருந்தார்கள். அப்போது அணையின் உள் பகுதிக்குள் யாரேனும் விவசாயம் செய்வார்களா என்ற ஆச்சரியத்துடன் பார்த்தேன். அதைப்பற்றி விசாரித்த போது அணையில் நீர் வற்றி விட்டால் எங்களுடைய நிலம், விவசாயம் இதெல்லாம் தெரியும்.‌ நீரின் அளவு உயர்ந்தால் விவசாயத்தை விட்டு விட்டு சென்று விடுவோம் என்றார்கள். இந்த விஷயம் தான் இந்தப் படத்திற்கான கதையாக உருவானது.

அதன் பிறகு கொரோனா காலகட்டத்தின் போது தேனியில் முகாமிட்டிருந்தேன். அப்போது அணை முழுவதும் நீர் நிரம்பி வழிந்து ஓடிக் கொண்டிருந்தது அப்போது ஒரு பெரியவர் கையில் குடையுடன் பார்த்துக் கொண்டிருந்தார். அந்தப் பார்வை எனக்குள் எதையெதையோ உணர்த்தியது.‌ அதுதான் எனக்கு இந்தப் படத்திற்கான உந்துதல்.

இப்படி ஒரு சீரியஸான கதையில் எப்படி காமெடி என்றுதானே நீங்கள் நினைக்கிறீர்கள். இதுதான் எனக்கான சவால். இதில் தான் ‘ரொக்க புலி’ என சரத் சாரும், ‘பாண்டி’ என சண்முக பாண்டியனையும் கதாபாத்திரங்களாக உருவாக்கியிருக்கிறேன். அந்த வகையில் இந்த படம் ஆக்ஷனும் காமெடியும் கலந்த என்டர்டெய்னராக இருக்கும்.

யுவன் ஷங்கர் ராஜா உடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என எனக்கு நீண்ட நாளாக ஆசை இருந்தது. என்னை முதன் முதலாக துபாய்க்கு அழைத்துச் சென்ற பெருமை அவருக்கு மட்டும் தான் உண்டு. இந்தப் படத்தில் இடம்பெறும் அம்மா பாடலை பாடியதற்காக இசைஞானி இளையராஜாவிற்கு மிகப்பெரிய நன்றி.

சரத் சாரிடம் கதை சொல்லும் போது சற்று பயம் இருந்தது. எப்போதாவது ஒருமுறை தான் அவர் பெரிய மனிதர் போல் நடந்து கொள்வார். மீதமுள்ள அனைத்து நேரங்களிலும் இளைஞராகவும், மனதளவில் குழந்தையாகவும் இருப்பார். அவருடன் இணைந்து பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம்.

இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கும் தார்னிக்காவிற்கும், சரத்குமாருக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. சரத்குமார் நடித்த நாட்டாமை படத்தில் ஆசிரியை வேடத்தில் நடித்த நடிகை ராணியின் மகள்தான் தார்னிகா.

சண்முக பாண்டியன் இந்தப் படத்தில் நடிக்கும் போது காட்சிகளுக்காக ஒத்திகை பார்க்க வேண்டும் என்றதும் முழு ஒத்துழைப்பு வழங்கினார்.‌ ஆனால் சண்டை காட்சிகளுக்காக ஒத்திகை பார்க்காமல் நேரடியாக படப்பிடிப்பில் கலந்து கொண்டார். ஏனென்றால் அது கேப்டனின் ரத்தத்தில் ஊறிய விஷயம். அவருக்கு ஒரு குளோசப் காட்சி வைக்கும் போது கேப்டனை பார்த்தது போலவே இருந்தது. இது எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. ‘படைத்தலைவன்’ படத்தின் தோற்றத்திலிருந்து தான் அவருடைய இந்த படத்திற்கான கதாபாத்திர தோற்றத்தை உருவாக்கினோம். இந்த திரைப்படத்தின் கதை களம் 1996ம் ஆண்டு என்பதால் அதற்கு ஏற்ற வகையில் மாற்றினோம். பகல், இரவு என்று பாராமல் படப்பிடிப்பில் முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார். அவருக்கான உயரமும், இடமும் தமிழ் சினிமாவில் காத்துக்கொண்டிருக்கிறது.

முதலில் திருமதி பிரேமலதா விஜயகாந்த்தின் அழைப்பின் பேரில் மரியாதை நிமித்தமாக தான் அவர்களை சந்தித்தேன். அவர்கள் தான் சண்முகத்திற்காக கதை ஒன்றை உருவாக்குங்கள் என கேட்டுக்கொண்டார். அந்த சந்திப்புக்கு பிறகு தான் இந்த கதைக்கான எண்ணம் உதித்தது. இதற்காக இந்த தருணத்தில் அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.‌

இந்த படத்திற்காக பின்னணி குரல் கொடுத்திருக்கும் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதிக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.

தயாரிப்பாளர் முகேஷ் த செல்லையா பேசுகையில், ”எல்லோரும் சினிமாவிற்காக சென்னைக்கு வருவார்கள். என்னை கொம்பு சீவி விட்டது இரண்டு பேர். ஒருவர் இளையராஜா. மற்றொருவர் கேப்டன் விஜயகாந்த். அவர்களுடைய இன்ஸ்பிரேஷன், அவர்களுடைய வாழ்க்கை முறைகள் தான் எனக்கு ஊக்கம் தருபவை.

இளையராஜா இன்றும் காலையில் 6:00 மணிக்கு தன்னுடைய ஒலிப்பதிவு பணியை தொடங்குவார். மாலை 6:00 மணி அளவில் நிறைவு செய்துவிட்டு வீட்டிற்கு சென்று விடுவார். இந்த இடைப்பட்ட தருணத்தில் அவர் வழங்கும் இசை படைப்பு என்பது மகத்தானது அவர் சென்றடையாத இடமே இல்லை.

கேப்டன் விஜயகாந்தின் நடிப்பு மட்டுமல்ல அவருடைய எண்ணங்களும் சிந்தனைகளும் அவருடைய கதாபாத்திரங்களும் மக்களுடைய மனதில் ஆழமாக சென்றடைந்திருக்கிறது. அவர் பிரியாணி மட்டும் போடவில்லை. அதனை பாசத்துடன் வழங்குவார். பிரியாணி உணவு மட்டுமல்ல அவரின் அன்பும் கூட. இதனை பார்த்து வியந்து தான் சென்னைக்கு வருகை தந்தேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு இப்போது தான் பட தயாரிப்பினை தொடங்கி இருக்கிறேன். உங்கள் அனைவரது ஆசியும், ஆதரவும் எங்களுடைய நிறுவனத்திற்கு தேவை. இந்தப் படத்தில் பணியாற்றிய நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.

நடிகர் சண்முக பாண்டியன் பேசுகையில், ”இந்த படம் எனக்கு மிகவும் ஸ்பெஷலான படம். திரைத்துறையில் நீண்ட கால அனுபவமிக்க பலர் என்னுடன் நடித்தார்கள். அப்பாவின் நெருங்கிய நண்பரான சரத்குமார் சார் நடித்திருக்கிறார். இந்த படத்தில் பணியாற்றியதிலிருந்து எனக்கும் அவர் நெருங்கிய நண்பராகி விட்டார். அவருடன் பழகிய நாட்கள் அனைத்தும் மறக்க முடியாதவை. குறிப்பாக படப்பிடிப்பு தளத்தில் அவருடைய அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பை அவரிடமிருந்து கற்றுக் கொண்டேன். பல நடிகர்களுக்கு அவர் உதவி செய்திருக்கிறார்.

வருத்தப்படாத வாலிபர் சங்கத்தை பார்த்த பிறகு, நானும் இயக்குநர் பொன்ராமின் ரசிகனாகி விட்டேன். அவருடன் இணைந்து ஒரு படம் பணியாற்ற வேண்டும் என்ற ஆசையும் இருந்தது. அவருடன் பணியாற்ற முடியுமா என்ற எண்ணம் ஏற்பட்டது. அது இன்று சாத்தியமாகி இருக்கிறது. அதற்காக அவருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்னிடம் இருக்கும் நகைச்சுவை நடிப்பையும், எதிர்வினையையும் அவர்தான் வெளிக்கொண்டு வந்தார். படப்பிடிப்பிற்கு செல்வதற்கு முன் ஒத்திகையும், பயிற்சியும் செய்தோம். படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர் எங்களுக்கு நிறைய சுதந்திரத்தை அளித்தார். காட்சிகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்பையும் உருவாக்கி தந்தார். குறிப்பாக நான்- சரத் சார் -கல்கி- மூவரும் லாரி தொடர்பான காட்சி ஒன்றில் நடித்தோம். அந்த காட்சியில் நாங்களாக தான் ஒரு எல்லைக்கு மேல் நிறுத்திக் கொண்டோம்.

இந்தப் படம் சீரியஸான கதை. அதை இயக்குநர் பொன்ராம் நகைச்சுவையுடன் கலந்து சொல்லி இருக்கிறார். இதை நீங்கள் அனைவரும் திரையரங்கத்திற்குச் சென்று ரசித்து அனுபவிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

நடிகர் சரத்குமார் பேசுகையில், ”இந்த விழா கொம்பு சீவி படத்தின் இசை வெளியீட்டு விழாவாக மட்டும் எடுத்துக் கொள்ளாமல், இது ஒரு உணர்வுப்பூர்வமான விழாவாக கருதுகிறேன். இந்த விழாவிற்காக இந்த மேடையில் நிற்கும் போது எனது அன்பு நண்பர் விஜயகாந்தை நினைக்காமல் இருக்க இயலாது. அவரைப் பற்றி சிந்திக்கத் தொடங்கினால் என் கண்கள் கண்ணீரால் நிரம்பி விடும். என்னால் கண்ணீர் சிந்தாமல் இருக்க முடியாது.

திருமதி பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில் நட்பை பற்றி குறிப்பிட்டார்கள். இந்தப் படத்தில் நடிப்பதற்கு இயக்குநர் பொன்ராம் ஒரு காரணமாக இருந்தாலும், சண்முக பாண்டியன் நடிக்கிறார் என்றதும் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.‌ ஏனெனில் கலை உலக பயணத்தில் முக்கியமான காலகட்டத்தில் விஜயகாந்தின் ஒப்பனைக் கலைஞர் ராஜு, புலன் விசாரணை படத்திற்காக ஒரு வில்லனை தேடிக் கொண்டிருக்கும் போது சரத்குமார் வாட்ட சாட்டமாக இருக்கிறார் என என்னை விஜயகாந்த்திடம் பரிந்துரை செய்திருக்கிறார். உடனடியாக என்னை அழைத்துக் கொண்டு விஜயகாந்தின் அலுவலகத்தில் அவர் முன் நிறுத்துகிறார்கள். அவர் என்னை பார்த்தவுடன் உடனடியாக இயக்குநர் செல்வமணியையும், என்னுடைய நண்பர் ராவுத்தரையும் பார்த்து விடுங்கள் என சொன்னார். என்னை பார்த்ததும் அவர் முடிவு செய்துவிட்டார். அப்போது இயக்குநரும், விஜயகாந்த்தும் ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள் . உடனடியாக நான் அருகில் உள்ள முடி திருத்தும் நிலையத்திற்கு சென்று என்னுடைய மீசையை மழித்து விட்டு அவர்கள் முன் நின்றேன். அன்று தொடங்கியது தான் இந்த கலைப் பயணம். அது மறக்க முடியாத தருணம்.

அந்தப் படம் நிறைவடைந்து வெளியான பிறகு எந்த கதாநாயகனும் பகிர்ந்து கொள்ளாத ஒரு விஷயத்தை விஜயகாந்த் என்னிடம் சொன்னார். ‘சரத் இந்த படத்தில் உங்களுக்குத் தான் மிகப்பெரிய பெயர்’ என்றார். அதைத் தொடர்ந்து கேப்டன் பிரபாகரன் படத்திலும் நடித்தேன்.

புலன்விசாரணை மற்றும் கேப்டன் பிரபாகரன் ஆகிய இரண்டு படங்களின் படப்பிடிப்பு நடைபெறும் போதும் சண்டை காட்சிகளில் எனக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அப்போது மற்றவர்கள் மாற்று வழியை சொன்ன போதும், சரத் குணம் அடைந்து வந்த பின் அந்த காட்சியை படமாக்கிக் கொள்ளலாம் என்று விஜயகாந்த் உறுதியாக சொல்லி விட்டார். அவருடைய உறுதி தான் என்னை மிகவும் கவர்ந்தது இன்று வரை அவருடைய என்னை பிணைத்து வைத்திருப்பதும் அவருடைய அந்த குணம் தான். அவருடைய திறமை, அன்பு, பாசம் ஆகிய அனைத்தையும் அவருக்கு அருகே இருந்து அனுபவித்தவன் நான்.

இன்று இந்த மேடையில் இருந்து ஒரு விஷயத்தை உங்களிடம் சொல்கிறேன். சண்முக பாண்டியன் எதிர்காலத்தில் மிகப்பெரிய நட்சத்திர நடிகராவார். அதில் எந்த மாற்றமும் இல்லை. கேப்டன் விஜயகாந்த் எப்படி இருப்பாரோ அதேபோல் இவரும் இருக்கிறார். படப்பிடிப்பு தளத்தில் ஒரு நடிகராக எளிமையாக அனைவரிடமும் பழகுகிறார்.

இந்தப் படத்தில் மாமன்- மச்சினனாக நாங்கள் நடிக்கவில்லை. வாழ்ந்திருக்கிறோம் என்று தான் சொல்ல வேண்டும். இந்த குடும்ப ரீதியிலான உறவு தொடர வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்.

சண்முக பாண்டியனுக்கு ஒரே ஒரு விஷயத்தை மட்டும் தான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். உங்கள் உயரத்தை பற்றி தவறாக நினைக்காமல் உங்கள் உயரத்திற்கு ஏற்ற பொருத்தமான கதையை தேர்வு செய்து நடிக்க வேண்டும். நீங்கள் ‘தென்னிந்தியாவின் அமிதாப்பச்சன்’. அதனால் கழுத்தை குனிந்து மற்றவர்களிடம் கேட்காமல் நிமிர்ந்து கதையைக் கேட்டு பணியாற்ற வேண்டும்.

இந்த ‘கொம்பு சீவி’ படத்தை அனைவரும் திரையரங்கத்திற்கு சென்று பார்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில் திரையரங்கத்திற்கு சென்று இந்த படத்தைப் பார்க்கும்போது ரசிகர்களுக்கு கிடைக்கும் மகிழ்ச்சியே தனி.

ஒரு திரைப்படம் வெளியாகி 30 நாட்களில் டிஜிட்டல் தளத்தில் வந்துவிடும் அதன் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று காத்திருக்காமல், இந்த படத்தை திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து ரசிக்க வேண்டும். அதே தருணத்தில் டிஜிட்டல் தளங்களுக்கும் ஒரு கோரிக்கையை முன் வைக்கிறேன். நீங்கள் ஒரு திரைப்படத்திற்கு 30 நாட்கள் அவகாசம் கொடுப்பதை, 50 நாளாக உயர்த்தினால் நன்றாக இருக்கும். மக்கள் திரையரங்கத்திற்கு வருகை தந்து படத்தை பார்த்து ரசிப்பார்கள். ரசிகர்களை திரையரங்கத்திற்கு வரவழைப்பதில் டிஜிட்டல் தளங்களும் தங்களுடைய பங்களிப்பை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் அப்போதுதான் திரைத்துறை ஆரோக்கியமாக இருக்கும் என்பதையும் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

இந்தத் திரைப்படம் விவசாயத்தை பற்றியும், விவசாயம் சிறப்பாக இல்லாத தருணத்தில் விவசாயிகள் என்ன செய்தார்கள் என்பது குறித்தும் ஒரு சிறிய விஷயத்தை எடுத்துக் கொண்டு இயக்குநர் அதனை நகைச்சுவையுடன் கலந்து சொல்லி இருக்கிறார். இந்த படத்தில் உழைத்த அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.

You missed

*“வா வாத்தியார்” திரைப்பட முன் வெளியீட்டு  விழா !!* ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரிப்பில், முன்னணி நட்சத்திர நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கியுள்ள திரைப்படம் “வா வாத்தியார்”. இப்படம் பொங்கல் கொண்டாட்டமாக உலகமெங்கும் ஜனவரி 14 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், படக்குழுவினர் இன்று  பத்திரிக்கை ஊடக பண்பலை நண்பர்களைச் சந்தித்து படம் குறித்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்வினில் *கலை இயக்குநர் கிரண் பேசியதாவது..,* எனக்கு பிடித்த இயக்குநர் நலன், அவரது இரண்டாவது படத்தில் என்னை நடிக்க வைத்தார் அவர் இப்படத்தில் ஆர்ட் டைரக்டராக வேலை செய்யச் சொன்னார். இந்தக்கதை கேட்ட போது எப்படி இப்படத்தில் கார்த்தி நடிக்கப்போகிறார் என்று தான் தோன்றியது. நான் ரஜினி ரசிகன்,  என் அம்மா எம் ஜி ஆர் ரசிகர். ஷீட்டிங்கில் கார்த்தியைப் பார்த்த போது அவர் முகம் எம் ஜி ஆர் போட்டோவுடன் அப்படியே  மேட்ச் ஆனது. அப்போதே இந்தப்படம் பெரிய வெற்றி பெறும் என நலனிடம் சொன்னேன்.  கண்டிப்பாக இப்படம் உங்கள் அனைவரையும் கவரும் நன்றி. *நடிகர் GM சுந்தர்  பேசியதாவது..,* எம் ஜி ஆர் பற்றி பேச  எனக்குத் தகுதியில்லை, பரம ரசிகர்  சத்தியராஜ் சார் முன் எம் ஜி ஆர் பற்றி எதாவது தகவல் தப்பாகக் கூறி விடுவோம் என பயமாக உள்ளது. அவர் அவ்வளவு தீவிரமான ரசிகர்.  கார்த்திக்கின் சிரிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும். ஒரு ஐகானிக் இமேஜை மீண்டும் திரையில் கொண்டு வருவது மிக கடினமான விசயம்.  எம் ஜி ஆராக நடிக்க கார்த்தி நிறைய ஹோம் ஒர்க் பண்ணியிருக்கிறார். அவரது பாடி லாங்குவேஜு எல்லாம் மிகவும் நன்றாக  இருக்கிறது. அவருக்கு என் வாழ்த்துக்கள். முழு அர்ப்பணிப்புடன் உண்மையாக உழைத்தால் தான்  அந்த மாதிரி விஷயங்கள்லாம் வெளிவரும்.  கார்த்தி மிகச்சிறப்பாகச் செய்துள்ளார்.  கிருத்தி ஷெட்டி  வெல்கம் டு தமிழ் சினிமா.  நான்  ஆனந்தராஜனோட கிளாஸ்மேட் ஃபிலிம் இனஸ்டிட்யூட்டில். அவருடன் நடித்தது மகிழ்ச்சி. இயக்குநர் நலன் அவரது காதலும் கடந்து போகும் படம் போலவே, இந்த படத்திலேயே எனக்கு ஒரு நல்ல ரோல் கொடுத்திருக்கார். அவருக்கு ரொம்ப நன்றி. இந்தப்படம் வெளிவருதற்குத் தயாரிப்பாளர்  ஞானவேல் சார் மற்ற எல்லா நடிகர்களும் ஆர்டிஸ்ட் எல்லாருமே சேர்ந்து எவ்வளவோ கஷ்டப்பட்டிருக்கிறார்கள் என்பது தெரியும். மிகக்கஷ்டபட்டு  இந்த படத்தைப் பொங்கலுக்குக் கொண்டு வந்துவிட்டார்கள்.  நிச்சயமாகச் சத்தியமாக இந்த படம்  மிகப்பெரிய வெற்றி பெறும். *நடிகை ஷில்பா மஞ்சுநாத் பேசியதாவது..,* முதலில் எனக்கு மாலினி என்ற கதாபாத்திரத்தைக் கொடுத்ததற்காக, எங்கள் இயக்குநர் நலன் குமாரசாமி   சாருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி. ஒரு கதையை எழுதும்போது, ஒரு கேரக்டர்க்கும் ஒரு ஆர்க் இருக்கும். ஆனால் ஒரு நடிகையா, எனக்கும் ஒரு ஆர்க் வேண்டும், எல்லா விதமான கதாபாத்திரங்களையும் செய்ய வேண்டுமென்று  ஆசைப்படுவேன். அதனால் தான் இப்படத்தில்  இந்த மாதிரி ஒரு ரிஸ்க் எடுத்தேன். அந்த ரிஸ்க் எடுக்கும்போது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது. அதனால தான் மாலினி இவ்வளவு அழுத்தமான ஒரு கேர்கடராக மாறியிருக்கிறாள். இந்த படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் இருவரின் முயற்சியையும் உழைப்பையும் முதலில் பாராட்ட வேண்டும். இந்த படம் பெரிய சிக்கல்களைச் சந்தித்தது. எங்கள் இயக்குநர் நலன் குமாரசாமி   சாருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி. இந்த மாதிரி ஒரு பெரிய மேடையில், இந்த அளவுக்கு இந்த படம் நிற்கிறது என்றால், அதற்கு முழுக் காரணமும் அவர்கள்தான். படக்குழுவிற்கு நன்றி.  எனக்கு வரும் படங்கள் ஏதாவது ஒரு காரணமாகத் தான் வரும். இந்தப் படம் ஒரு ஸ்டார் படம். தமிழ்நாட்டில் இது ஒரு பெரிய திருவிழா வெளியீடாக இருக்கும்,  அதனால்  இதுபோன்ற ஒரு படத்தைத் தேர்வு செய்வது ரொம்ப சிக்கலான விஷயம். ஆனா எனக்கு உண்மையிலேயே நம்பிக்கை இருக்கிறது. இந்த படம் மிக நன்றாக வந்திருக்கிறது. நீங்க எல்லாரும் இந்த படத்தைப் பார்த்து ஆதரவு தர வேண்டும் நன்றி. *நடிகர் ஆனந்த்ராஜ் பேசியதாவது..,* இந்த படம் ஒரு நல்ல படம். நீங்களும் பார்த்தாலே அது உங்களுக்குப் புரியும். நாளைக்கு இந்த படம் வெளியாகப் போகிறது. அதுவும் ஒரு நல்ல நாளில், ஒரு நல்ல நேரத்தில் வெளியாகிறது. நான் தயாரிப்பாளர் ஞானவேல்  சார்கிட்ட கூட “சார், முன்னாடி சொன்ன தேதியை விட, நாளைக்கு ரிலீஸ் ஆகுற தேதியே ரொம்ப நல்ல தேதிங்க” என்று சொன்னேன். நாளை போகி பண்டிகை. பழசுகளை எல்லாம் எரிச்சிட்டு, புதுசா ஆரம்பிக்கிறதுதான் நம்ம கலாச்சாரம். அதனால் நாளைக்கு நம்ம மனசில் இருக்கிற எல்லா பழைய விஷயங்களையும் விட்டுவிட்டு, ஒரு புதுசா ஆரம்பிக்கிற படம்தான் ‘வா வாத்தியார்’. இன்று  காலை நானும், கார்த்தி சாரும், சத்யராஜ் சாரும் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் சமாதிக்கு போயிருந்தோம். அங்க போனப்போ ஒரு சந்தோஷம், ஒரு மன நிறைவு இருந்தது. அவர் சமாதியை நேரில் போய் பார்த்து, எங்களோட கண்ணீர் அஞ்சலியை செலுத்திட்டு, இந்த படத்தை உங்களுக்குக் கொண்டு வர்றதுல எனக்கு ஒரு பெருமை இருக்கிறது. உங்களால முடிந்தவரை இந்த படத்தை அவருக்கான மரியாதையா நினைச்சு, எங்களுக்கும் கொஞ்சம் ஆதரவு தாருங்கள். இந்த படம் நன்றாக வெற்றி பெறும் என்று  எங்களுக்கு முழு நம்பிக்கை இருகிறது .இந்த படத்தில் நடித்த கார்த்தி சார், சத்யராஜ் சார் கிட்ட இருந்து தான் நிறைய விஷயங்கள் கற்றுக்கொண்டார். அவர் ஒரு சீனியர், ஒரு அண்ணன் மாதிரி. இந்த படத்தோட இயக்குநர் நலன் சார் – ரொம்ப பெரிய, அனுபவம் வாய்ந்த இயக்குநர். அவர் கதையை நேரில வந்து சொன்னபோதே “சார், நீங்க சொல்லவே வேண்டாம்… நான் செய்கிறேன்”என்று உடனே சொன்னேன். இந்த படம் மிக நன்றாக இருக்கும்.  புரட்சித் தலைவரை மீண்டும் திரையில் பார்க்கவேண்டுமென்று ஆசைப்பட்டால், இந்த படத்தைக் கண்டிப்பா பாருங்க. அனைவருக்கும் நன்றி. நடிகர் சத்யராஜ் பேசியதாவது..,  எம் ஜி ஆர் பற்றிப் பேசினால் அது தனியா ஒரு கதையாக போய் வ்டும். இந்த படத்தோட தயாரிப்பாளர் தம்பி ஞானவேல் ராஜா பற்றி ஒரு விஷயம் சொல்லவேண்டும். அவருடைய அப்பா ஒரு தீவிரமான எம் ஜி ஆர் ரசிகர். அவர் 110 தடவை  நாட்டோடி மன்னன் படம் பார்த்ததாக சொன்னார். அவ்வளவு தீவிர ரசிகர். அப்படிபட்ட தயாரிப்பாளருக்கு அவர் இந்தப்படம் அமைந்தது மகிழ்ச்சி. கார்த்திக்கு முதல் படமே மிக சவாலான படம். வெளிநாட்டில் படிச்சிட்டு வந்து, அந்த மாதிரி ஒரு கிராமத்துக் கதாபாத்திரம் பண்ணுறது எளிமையானது இல்லை.  ஆனால் அதைவிட கஷ்டமான விஷயம் இந்த வாத்தியார் கதாபாத்திரம். ஏனென்றால் இது ஒரு தலைவரின் பெயரோட சம்பந்தப்பட்ட கதாபாத்திரம். ஆனால் அதைத்தாண்டி இந்தப்படத்தில் எம் ஜி ஆர் பாடி லாங்குவேஜை கொண்டு வந்து அசத்திவிட்டார். கிருத்தி ஷெட்டி, ஷில்பா, தம்பி ஆனந்த்ராஜ், தம்பி சுந்தர்  எல்லோரும் சிறப்பாக நடித்துள்ளனர். ஐம்பது வருடம் முன் கோவையிலிருந்து வந்த போது,  பல் பெரிதாக இருக்கிறது என சிவக்குமார் அண்ணன் சிபாரிசில் டாக்டரிடம் சென்று பல்லைக் குறைத்தேன். ஆனால் நலன் இப்படத்தில் உங்கள் கதாப்பாத்திரம் வித்தியாசமாக வேண்டுமென பல் வைக்க வைத்து விட்டார்.  இப்படத்தில் நான் வில்லனாக நடித்துள்ளேன்.  எம் ஜி ஆரின் பொங்கல் படம் படம் போல இந்தப் பொங்கலுக்கு வா வாத்தியார் வருகிறது அனைவரும் கொண்டாடுங்கள் நன்றி. *நடிகை கிருத்தி ஷெட்டி பேசியதாவது..,* ஒரு பேட்டியில்  நலன் சார் ஒரே விஷயத்தை *“இது ஒரு பெஸ்டிவல் படம். பல குடும்பங்கள் ஒன்றாகச் சேர்ந்து வந்து பார்க்கிற படம்”*என்று சொன்னார். இப்போது அது அப்படியே நடந்துள்ளது. குடும்பமா, நண்பர்களோடு, எல்லாரும் சேர்ந்து படம் பார்க்கிற மாதிரி இந்த படம் மாறியிருக்கிறது. அதுக்கு நான் ரொம்ப ரொம்ப சந்தோஷப்படுறேன். இந்த படம் தாமதமானது பற்றி நிறைய பேர் என்கிட்ட கேட்டார்கள். அந்த நேரத்தில் எனக்கும் கொஞ்சம் வருத்தமா தான் இருந்தது. ஆனால் நான் ஒன்று நம்புகிறேன் – நல்ல விஷயம் நடக்கவேண்டுமானால், அதுக்கு ஒரு சரியான நேரம் இருக்கும். கடவுள் நம்மளை காத்திருக்க வைக்குறார்னா,அதுக்குப் பின்னால் ஒரு பெரிய திட்டம் இருக்கும்னு நம்புறேன். அதனால இப்போ எல்லாம் சரியா நடந்ததுக்கு நான் ரொம்ப மகிழ்ச்சியா இருக்கிறேன். இந்தப்படத்தில் என்னைச் சேர்த்ததுக்காக நலன் சார், மற்றும் ஞானவேல் சார்  இருவருக்கும் என் மனமார்ந்த நன்றி. நலன் சார் இந்த படத்திற்காக எவ்வளவு கடினமா உழைத்திருக்கார்னு நான் நேரில பார்த்திருக்கேன். அவர் வெற்றியைப் பார்க்க ஆவலாக இருக்கிறேன்.  கார்த்தி சாரின் தீவிர ரசிகை நான், ஆனால் அவரை நேரில சந்திச்ச பிறகு, நான் இன்னும் பெரிய ரசிகையா மாறிவிட்டேன். ‘வா வாத்தியார்’ கதாபாத்திரம் – பெரியதாக  இருந்தாலும்,  அதை அவரைவிட சிறப்பாக யாராலும்  செய்ய முடியாது. கார்த்தி  மனதளவில் மிகச்சிறந்த மனிதர். அது அவரது கதாப்பாத்திரங்களிலும் பிரதிபலிக்கிறது, வா வாத்தியார் ஒரு நல்ல மனசு கொண்ட கேரக்டர் அது அவருக்குள்ள இயல்பாகவே இருக்கிறது. நான் அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன். சந்தோஷ் நாராயணன் இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. இப்படத்தில் உழைத்த அத்தனை கலைஞர்களுக்கும் நன்றி. அனைவருக்கும் நன்றி *தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேசியதாவது..,* சில படங்கள் சரியாகப் போகவில்லை, அதனால் நெகடிவிட்டி, நிறையக் செய்தி பரவி விட்டது. ஆனால் நான் இங்கு தான் இருக்கிறேன். அவருக்கு அவ்வளவு கடன் இருக்கிறது எனச் சொல்லுகிறார்கள். ஆனால் இண்டஸ்ட்றியில் கடனே இல்லாத தயாரிப்பாளர் நான் தான். நான் நன்றாகத் தான் இருக்கிறேன். முக்கியமாகச் சிலருக்கு நன்றி சொல்ல வேண்டும். முதலில் சூர்யா அண்ணாவுக்கு நன்றி. பல நண்பர்கள் மேடையில் ஆதரவாக பேசி விட்டு, காணாமல் போய் விடுவார்கள்.  ஆனால் சூர்யா அண்ணன் எப்போதும் எதுவானாலும் என்னுடன் இருந்து, என்னைப் பார்த்துக்கொண்டிருக்கிறார் அண்ணாவுக்கு நன்றி. KVN அண்ணா, அவர்களின் ஜனநாயகன் படம் பெரிய புக்கிங் ஆகியிருந்தது,  விஜய் சாரின் கடைசிப்படம் ஆனால் அது வருவது தாமதமாகியுள்ளது. ஆனால் இப்படம் வெளிவருவதில் எனக்கு  அவர் எனக்கு பெரிய துணையாக இருந்தார்.  அவருக்கு என் நன்றிகள்.  பென் மூவிஸ் ஜெயந்திலால் காடா சாருக்கு நன்றி. சக்தி பிலிம்ஸ் சக்திவேலனுக்கு நன்றி. பல நண்பர்கள் உறுதுணையாக இருந்தார்கள் அனைவருக்கும் நன்றி.  TTT படம் வருகிறது கண்ணன் ரவி சார்  இப்படத்திற்கும் பெரிய உதவிகள் செய்தார் அவர் படமும் பெரிய வெற்றி பெறட்டும். இப்படத்தில் எல்லோரும் மிகச்சிறந்த நடிப்பைத் தந்துள்ளார்கள். படம் 2 மணி நேரம் 9 நிமிடங்கள் தான், தீயாகப் பறக்கும். படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும். நன்றி. *நடிகர் கார்த்தி பேசியதாவது..,* கடந்த வருடம்,  பெரிய  செலிப்ரேஷனோட இந்த படத்தை வெளியிட  நாங்கள் திட்டமிட்டோம். ஆனால் அது தள்ளிப்போய்விட்டது. எனது முதல் படமும் இது போல  தள்ளிப்போனது. அடுத்த படம் தள்ளிப்போனது.  அதனால தாமதம் என்கிறது எங்களுக்கு புதுசு இல்லை – பழகிவிட்டது. இந்த சூழ்நிலையில், நான் ஞானவேல்ராஜா சார்கிட்ட எப்போதும் ஒரு விஷயத்தை மட்டும் தான் சொன்னேன். “நீங்கள்  நான் என்ன நினைக்கிறேனென்று நினைக்கவே வேண்டாம். உடலைப் பார்த்துக்கொள்ளுங்கள் என்றேன். நாம் போராட்டத்தில் உடலைக் கவனிக்காமல் விட்டுவிடுகிறோம். சின்ன வயதில் என் அப்பா ஒவ்வொரு அரிசியிலும் யார் யார் பெயர் எழுதப்பட்டுள்ளதோ அவர்களுக்குத்தான் அது கிடைக்கும் என்பார். அது போல் சினிமாவில் ஒவ்வொரு ஃப்ரேமிலும் யார் பெயர் எழுதப்பட்டுள்ளதோ அவர்களுக்குத்தான் அது கிடைக்கும். அவர் சொன்னது அப்போது புரியவில்லை இப்போது புரிகிறது ஞானவேல்ராஜா சார் சொன்ன மாதிரியே,நான் நிறைய பேருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கேன். முக்கியமாக சூர்யா  அண்ணா. அவரோட சப்போர்ட் இல்லாமல் இந்த படம் இப்படி ரிலீஸ்  ஆகி இருக்க முடியாது. அதே மாதிரி பைனான்ஸியர்ஸ், டிஸ்ட் ரிபியூட்டர்ஸ்,  எக்ஸிபிட்டர்ஸ், டெக்னீஷியன்ஸ் எல்லாருக்கும் என் மனமார்ந்த நன்றி. 48 மணி நேரம், 50 மணி நேரம், தூங்காம வேலை செய்து, இந்த படத்தை நம்ம கைக்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்கள். எல்லா தொழிலாளர்களுக்கும் நான் மனதார நன்றி சொல்லிக் கொள்கிறேன். நலன் சார் எல்லாருக்கும் பிடிச்ச ஒரு இயக்குநர். ரசிகர்களுக்கு மட்டுமல்ல ஆர்டிஸ்ட்களுக்கும், இயக்குநர்களுக்கும் பிடித்த இயக்குநர்.  அவர் இந்த கான்செப்ட் கொண்டு வந்தப்போ, எனக்கு ரொம்ப பயமா இருந்தது. இந்த கேரக்டருக்கு ஒரு தனி டிரெய்னிங் வேண்டும். ஆனால் நான் டிரெய்னிங் எடுத்து வரவில்லை. On-set-ல கற்றுக்கொண்டேன், மிகவும் சின்சியராக பண்ண முயற்சி செய்துள்ளேன்.ஒவ்வொரு நாளும், எம் ஜி ஆர் சாரோட படங்களைத் திரும்பத் திரும்ப பார்த்து, அவரோட close-ups பார்த்து, “என்னோட முகத்துல அதை எப்படி கொண்டு வரலாம்?”ன்னு யோசிச்சுக்கிட்டே இருந்தேன். எனக்கு என்னோட முகத்தையே சரியா பார்க்க முடியாத பயம் இருந்தபோது, அவரோட முகத்தை screen-ல கொண்டு வரணும்னு நினைத்ததே ரொம்ப பயமாக இருந்தது. ஆனால் நலன் மாதிரி ஒரு இயக்குநர், ஜார்ஜ் மாதிரி ஒரு கேமராமேன், அந்த முழு குழுவின் சப்போர்ட் இருந்ததால “இத பண்ண முடியும்”ன்னு ஒரு நம்பிக்கை வந்தது. அது படத்தில் சாத்தியமாகியுள்ளது. சந்தோஷ் நாராயணன் அவர்களின் இசை இந்த படத்தை இன்னொரு லெவலுக்கு கொண்டு போயிருக்கிறது. எம் ஜி ஆர் திரையில் மட்டுமில்லை நிஜத்திலும் ஒரு ஹீரோவாக இருந்திருக்கிறார். அதை மாடர்னாக ரசிக்கக்கூடிய கமர்ஷியல் படமாக  செய்தது ரொம்ப பெரிய விஷயம். காலை அவர் சமாதிக்கு போய் கும்பிட்டு வந்தோம். அங்க நின்னப்போ உணர்வு வேற மாதிரி இருந்தது. நாற்பது வருஷமா அவர் இல்லை. ஆனா இன்னும் அவரை நினைக்கிறோம். இன்னும் அவரைப் பற்றி படம் எடுக்க ஆசைப்படுகிறோம். அங்கிருந்து திரும்பி வரும்போது, இந்த எல்லா விஷயங்களும் சரியாக அமைந்ததுக்கு அவரோட ஆசிர்வாதம் கண்டிப்பாக இருக்கிறது என்று நான் நம்புகிறேன். குழந்தைகளோடு, குடும்பமா, எல்லாரும் சேர்ந்து பார்த்து ரசிக்ககூடிய ஒரு ஜாலியான படம் இது. இந்த பொங்கலுக்கு  ரிலீஸ்  ஆகுற, ரிலீஸ் ஆகப்போகுற எல்லா படங்களும் மக்களைச் சந்தோஷப்படுத்தி பெரிய வெற்றி பெறவேண்டுமென்று மனசார வாழ்த்துகிறேன். நன்றி. இப்படத்தில் கார்த்தி நாயகனாக நடிக்க, சத்யராஜ், ராஜ்கிரண், கிருத்தி ஷெட்டி, ஜி. எம். சுந்தர், ஷில்பா மஞ்சுநாத், ஆனந்த்ராஜ், கருணாகரன், ரமேஷ் திலக், பி எல் தேனப்பன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். முன்னணி ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை டி. ஆர். கே. கிரண் கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை வெற்றி கையாண்டிருக்கிறார். அனல் அரசு சண்டை காட்சிகளை அமைத்திருக்கிறார். பெரும் பொருட்செலவில்  ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா இந்தத் திரைப்படத்தை பிரம்மாண்டமாக  தயாரித்திருக்கிறார்.   *இப்படம் பொங்கல் கொண்டாட்டமாக ஜனவரி 14 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.*

This will close in 0 seconds